மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்த அனுமதி- தேர்வுகள், சேர்க்கை தேதிகளையும் அறிவித்தது சுப்ரீம்கோர்ட்!!

டெல்லி: அகில இந்திய பொது மருத்துவ கல்விக்கான நுழைவுத் தேர்வை நடத்த மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் நுழைவுத் தேர்வு மற்றும் 2-ம் கட்ட தேர்வுகள், மாணவர் சேர்க்கைக்கான தேதிகளையும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகள், மருத்துவ ஆராய்ச்சி மையங்களில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், எம்டி போன்ற மருத்துவக் கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வந்தது. இந்த நுழைவுத் தேர்வுக்கு பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு பறிபோய்விடும் என்று மாநில அரசுகள் சார்பில் எதிர்ப்பு உருவானது. இதையடுத்து, பல்வேறு மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் மருத்துவ கல்விக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்தன. SC reserves judgment on NEET இந்த வழக்கு நீதிபதிகள் அல்தாமஸ் கபீர், விக்ரம்ஜித் ஜெயின், அனில்தவே ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த டிவிஷன் பெஞ்சில் இருந்த அல்தமாஸ் கபீர், விக்ரம்ஜித் ஜெயின் ஆகியோர் தடை விதித்து உத்தரவிட்டனர். நீதிபதி அனில்தவே தடை விதிக்க மறுப்பு தெரிவித்து மாறுபட்ட தீர்ப்பை அறிவித்தார். இருந்தபோதிலும், மெஜாரிட்டி நீதிபதிகள் என்ற அடிப்படையில் கடந்த 2013 ஜூலை 18ல் நுழைவுத் தேர்வுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசும், இந்திய மருத்துவக் கவுன்சிலும், மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வுக்கு கடந்த 2013ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் விதித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மத்திய அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் சார்பில் தொடரப்பட்ட சீராய்வு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனில் ஆர்.தவே, ஏ.கே.சிக்ரி, ஆர்.கே.அகர்வால், ஏ.கே.கோயல், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் முன் நடைபெற்று வருகிறது. இந்த சீராய்வு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஏற்கனவே நுழைவுத் தேர்வுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டனர். இதையடுத்து, மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு அனுமதி கிடைத்தது. மேலும் நுழைவுத் தேர்வு நடத்தும் நாள், தேர்வு விவரங்கள் அடங்கிய பட்டியலை இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று மருத்துவக் கல்விக் கவுன்சில், மத்திய அரசு, சிபிஎஸ்இ ஆகியவற்றுக்கு உத்தரவிட்டிருந்தனர். இன்றைய விசாரணையின் போது மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்த தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மாணவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு நடத்த சிறப்பு சட்டம் அமலில் இருப்பதால் 2007-ல் இருந்து தமிழகத்தில் நுழைவுத்தேர்வு நடத்துவதில்லை என வாதிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பு பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் பிற்பகலில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், மருத்துவ கல்விக்கான நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசுக்கு அனுமதி அளித்தது. அத்துடன் மே 1-ந் தேதி முதல் கட்ட தேர்வையும் ஜூலை 24-ல் 2-வது கட்ட தேர்வையும் நடத்த வேண்டும் என்றும் அனைத்து முடிவுகளையும் ஆகஸ்ட் 17-ந் தேதி வெளியிட்டு மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.