பி.எஃப். வட்டிக் குறைப்புக்கு எதிர்ப்பு: ஏப்.29-இல் தொழிற்சங்கங்கள் போராட்டம்

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான (பி.எஃப்.) வட்டியைக் குறைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 29) நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தேசிய அளவிலான தொழிற்சங்கங்கள் கூட்டாகத் தெரிவித்துள்ளன.

 கடந்த 2015-16-ஆம் நிதியாண்டுக்கான பி.எஃப். தொகைக்கு 8.8 சதவீத வட்டி வழங்க வேண்டும் என்று, மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தலைமையிலான மத்திய வாரியக் குழு (சிபிடி), கடந்த பிப்ரவரியில் பரிந்துரை செய்திருந்தது. ஆனால், அதற்கு மாறாக, அந்த பி.எஃப். தொகைக்கு 8.7 சதவீத வட்டி வழங்குவதற்கு மத்திய நிதியமைச்சம் ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐஎன்டியுசி, ஏஐடியுசி, சிஐடியு, ஏஐயுடியுசி உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. அந்தச் சங்கங்கள் செவ்வாய்க்கிழமை கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
 மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டிக்கிறோம். பி.எஃப். வட்டி விகிதத்தை மத்திய அரசு குறைக்கும் முடிவைக் கண்டித்து, நாடு தழுவிய அளவில் வரும் 29-ஆம் தேதி நடைபெறவுள்ள போராட்டத்தில் பங்கேற்குமாறு தொழிலாளர்களுக்கும், பல்வேறு தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 எனினும், இந்தப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆதரவு பெற்ற பாரதிய மஸ்தூர் சங்கம் (பி.எம்.எஸ்.) பங்கேற்கவில்லை. அதற்கு முன்னதாகவே, சிபிடி பரிந்துரை செய்த வட்டி விகிதத்தை அமல்படுத்தக் கோரி, புதன்கிழமை (ஏப்ரல் 27) நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்போவதாக, பி.எம்.எஸ். தொழிற்சங்கத்தின் பொதுச் செயலர் விர்ஜேஷ் உபாத்யாய கூறினார்.