'பிட்' அடித்த தனித்தேர்வர்கள்கண்காணிப்பாளர்கள் 20 பேர் மாற்றம்

தேனியில் 8ம் வகுப்பு தேர்வில் தனித்தேர்வர்கள் 'பிட்' அடிக்க அனுமதித்த சம்பவத்தை தொடர்ந்து, அறை கண்காணிப்பாளர்கள் 20 பேர் மாற்றப்பட்டனர்.
தேனியில் அரசு உதவிபெறும் பள்ளியில் நேற்று முன்தினம் 8ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு கணித தேர்வு நடந்தது. இதில் பங்கேற்றவர்களில் சிலர் முன்கூட்டியே தேர்வு மைய பொறுப்பாளர், அறை கண்காணிப்பாளர்களை 'கவனித்தனர்'. இதனால் வினாத்தாளுடன் அதற்கான விடைகளின் நகலும் அவர்களுக்கு வழங்கப்பட்டு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டது தெரியவந்தது. அவர்கள் 'பிட்' அடிக்க கல்வித்துறை அலுவலர்கள் உடந்தையாக இருந்ததாக புகார் எழுந்தது.


இதுகுறித்து பெரியகுளம் மாவட்ட கல்வி அலுவலர் நாகராஜன் விசாரணை நடத்தினார். இதையடுத்து இந்த தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் 20 பேர் மற்றும் தேர்வு மைய பொறுப்பாளர் இப்பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இவர்களுக்கு பதிலாக இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நேற்று நடந்த அறிவியல் தேர்வை 243 பேர் எழுதினர். 140 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்.
மாவட்ட கல்வி அலுவலர் கூறுகையில், “ கணிதத் தேர்வில் தனித்தேர்வர்கள்' பிட்' அடிக்க அனுமதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அறை கண்காணிப்பாளர்கள், தேர்வு மைய பொறுப்பாளர் மாற்றப்பட்டுள்ளனர். இதுவே இவர்களுக்கு தண்டனை. தேர்வு முடிந்த பின் விரிவான விசாரணை நடத்தப்படும். இதில் கல்வித்துறை அலுவலர்கள் உடந்தையாக இருந்தனரா என்ற கோணத்திலும் விசாரிக்கப்படுகிறது,” என்றார்.