திட்டமிட்டப்படி மே 1-ல் மருத்துவ பொது நுழைவுத் தேர்வு: உச்ச நீதிமன்றம்


புது தில்லி: மருத்துவ பொது நுழைவுத் தேர்வு அறிவித்தபடி மே 1, ஜூலை 24 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்டவட்டமாகக் கூறியது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவில் "மே 1ஆம் தேதி நடைபெறவுள்ள அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை முதல் கட்ட தேசிய தகுதி, நுழைவுத் தேர்வாகவும், ஜூலை 24ஆம் தேதி நடத்தப்படும் தேசிய தகுதி, நுழைவுத் தேர்வை இரண்டாம் கட்டத் தேர்வாகவும் கருதி அவற்றின் முடிவுகளை ஆகஸ்ட் 17ஆம் தேதி வெளியிட வேண்டும். செப்டம்பர் 30க்குள் மாணவர் சேர்க்கை நடைமுறைகளை முடிக்க வேண்டும்' என்று கூறியது.
இந்த நிலையில், அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு இன்னும் இரண்டு நாள்கள் மட்டுமே இருப்பதால், அந்தத் தேர்வை தேசிய தகுதி, நுழைவுத் தேர்வாகக் கருதுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதில் பல்வேறு நடைமுறை பிரச்னைகள் இருப்பதாக மத்திய அரசு கருதியது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்த நீதிபதிகள் அமர்வுக்குத் தலைமை தாங்கிய நீதிபதி அனில் ஆர். தவே முன்னிலையில் மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆஜராகி "தேர்வு விவகாரத்தில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் தரப்பில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்குத் தீர்வாக, மே 1ஆம் தேதி தேர்வு நடத்துவதற்குப் பதிலாக ஒரே கட்டமாக ஜூலை 24இல் தேர்வு நடத்தலாம் அல்லது மே 1ஆம் தேதி தேர்வை மாநில அரசுகளும், தனியார் மருத்துவக் கல்லூரிகளும் முந்தைய வழக்கத்தின்படியே நடத்திக் கொள்ள அனுமதிக்கலாம் என்றவாறு உத்தரவை மாற்றிப் பிறப்பிக்க வேண்டும்' என கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, இந்த விவகாரத்தை வெள்ளிக்கிழமை பிற்பகலில் பரிசீலிப்பதாக நீதிபதி அனில் ஆர். தவே கூறியதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், மருத்துவ பொது நுழைவுத் தேர்வு தொடர்பான உத்தரவில் உச்ச நீதிமன்றம் மாற்றம் செய்யலாம் என்று எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில்,  பிற்பகலில் அட்டர்னி ஜெனரலின் கோரிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதி அனில் ஆர். தவே, "தனது தலைமையிலான நீதிபதிகள் அமர்வில் இடம் பெற்ற மற்றவர்களை (நீதிபதிகள் சிவ கீர்த்தி சிங், ஏ.கே. கோயல்) திடீரென அழைத்து இந்த விவகாரத்தை விசாரிக்க போதிய நேரம் இல்லை. வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவின்படி அறிவிக்கப்பட்ட தேதியில் மருத்துவ பொது நுழைவுத் தேர்வு நடைபெறட்டும். சம்பந்தப்பட்டவர்கள் (மத்திய அரசு, சம்பந்தப்பட்ட மனுதாரர்கள்) முறைப்படி மனு தாக்கல் செய்தால், இந்த விவகாரத்தை வேறு நாளில் நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும்' என்று குறிப்பிட்டார்.
இதன் மூலம் தனது உத்தரவில் எந்த மாற்றத்தையும் செய்யாமல், இரு கட்ட தேர்வுத் தேதிகளை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இரு கட்டமாக நடைபெறவுள்ள மருத்துவ பொது நுழைவுத் தேர்வை மொத்தம் 6.5 லட்சம் பேர் எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, மாநில அரசுக் கல்லூரிகளில் மருத்துவ பொது நுழைவுத் தேர்வு முறை அமலில் இல்லாத தமிழ்நாட்டில், தேர்வு நடத்துவதைக் கட்டாயமாக்க வகை செய்யும்  உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.