பிளஸ் 1லும் 'ஆல் பாஸ்:' ஆசிரியர்கள் குழப்பம்

பிளஸ் 1 மாணவர்களுக்கு கண்டிப்பாக, 95 சதவீத தேர்ச்சி வழங்க வேண்டும்' என, முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளதால், பள்ளி நிர்வாகங்கள் குழப்பம் அடைந்து உள்ளன. அதனால், பல பள்ளிகள், தேர்ச்சி தகுதி இல்லாத மாணவர்களுக்கு, மாற்று சான்றிதழ் எனப்படும், 'டிசி'யை கட்டாயமாக கொடுத்து வெளியேற்ற முயற்சித்துள்ளன.

சென்னை முதன்மை கல்வி அதிகாரி அனிதா, ஏப்ரல், 12ல் திருத்தியமைக்கப்பட்ட சுற்றறிக்கையை பள்ளிகளுக்கு அனுப்பியுள்ளார். அதன் விவரம் வருமாறு:

நிபந்தனை:மாணவர்களின் இடை நிற்றலை தவிர்க்க, 9ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கான தேர்ச்சி விதிகள், பள்ளிகளின் ஆசிரியர் குழுக்கள் மூலம் ஒப்புதல் பெறப்பட்டு, தேர்ச்சி வழங்க வேண்டும். இதில், மாணவர்களுக்கு, 95 சதவீதத்துக்கும் குறையாமல் தேர்ச்சி அளிக்க வேண்டியது அவசியம். நிர்ணயிக்கப்பட்ட விதிகளுக்கு அப்பால், தேர்ச்சி வழங்கப்படுமானால், அதற்கு முதன்மை கல்வி அலுவலரின் சிறப்பு அனுமதி பெற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன், மார்ச், 9ல் அனுப்பப்பட்ட உத்தரவு வேறு விதமாக இருந்தது. அதன்படி, 'பிளஸ் 1 மாணவர்களுக்கு, 85 சதவீதத்துக்கும் குறையாமல் தேர்ச்சி அளித்தல் அவசியம். மாணவர் வருகை பதிவு, 75 சதவீதத்துக்கு குறையாமல் இருக்க வேண்டும்' என, இருந்தது. தற்போது, வேறு விதமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

பிளஸ் 1ல் கட்டாயமாக, 95 சதவீதம் தேர்ச்சி அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது ஏன் என ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகிகளும் குழப்பத்தில் உள்ளனர்.
சட்டசபை தேர்தல் வரும் நிலையில், சென்னையில் மட்டும் இந்த உத்தரவு அவசர அவசரமாக பள்ளிகளுக்கு கூரியர் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், ஏப்., 22க்குள், பிளஸ் 1 தேர்ச்சி பட்டியலை அறிவிக்கவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
உடனடி தேர்வு:இதுகுறித்து, பள்ளி நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:
பல அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 மாணவர்களில், 20 சதவீதம் வரை தேர்ச்சி குறைந்துள்ளனர். பல மாணவர்கள், குறைந்தபட்சமாக, 70 மதிப்பெண் கூட பெறாமல் ஆறு மதிப்பெண், 11 மதிப்பெண் என சொற்ப மதிப்பெண் பெற்றுள்ளனர். அவர்களை தேர்ச்சி இழப்பு செய்து, ஜூனில் நடக்கும் சிறப்பு உடனடி தேர்வுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டு உள்ளோம்.

ஆனால், 95 சதவீதம் கண்டிப்பாக தேர்ச்சி அளிக்க வேண்டும் என, முதன்மை கல்வி அதிகாரி திடீரென உத்தரவு பிறப்பித்தது ஏன் என்பது, பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இதுகுறித்து முதன்மை கல்வி அதிகாரியும், இணை இயக்குனர்களும் விசாரணை நடத்த வேண்டும்.
இதன் மூலம், பல பள்ளிகள் தேர்ச்சி குறைந்த மாணவர்களை இடை நிற்றலாக காட்டியும், பிளஸ் 2வில் அதே பள்ளியில் படிக்க முடியாத வகையில், 'டிசி' கொடுத்தும் வெளியே அனுப்பவும் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.