17 ஆயிரம் ஆசிரியர்கள் வரும் கல்வி ஆண்டில் புதிதாக நியமனம் - மந்திரி கிம்மனே ரத்னாகர் தகவல்

17 ஆயிரம் ஆசிரியர்கள் வரும் கல்வி ஆண்டில் புதிதாக நியமனம் - மந்திரி கிம்மனே ரத்னாகர் தகவல்
வரும் கல்வி ஆண்டில் புதிதாக 17 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று மந்திரி கிம்மனே ரத்னாகர் கூறினார்.கல்வித்துறை மந்திரி கிம்மனே ரத்னாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

17 ஆயிரம் ஆசிரியர்கள்
பி.யூ.கல்லூரி கல்வி வாரிய நிர்வாகம் மற்றும் தேர்வாணையநிர்வாகத்தை தனித்தனியாக பிரித்து அமைப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இதுகுறித்து அறிக்கை வழங்குமாறு துறை உயர் அதிகாரிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பி.யூ.கல்லூரி கல்வி தேர்வு நடைமுறையில் ஆன்லைன் வசதியை அறிமுகம் செய்வது குறித்தும் அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதன் சாதகம் மற்றும் பாதகம் குறித்து குழு அமைத்து ஆய்வு செய்யப்படும். அதன் பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும்.இந்த கல்வி ஆண்டில் 12 ஆயிரத்து 200 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அடுத்த கல்வி ஆண்டில் புதிதாக 17 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். இது தொடர்பாக நிதித்துறையிடம் வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு கிடைக்கும் இடங்களுக்கு 337 பள்ளிகளில் யாரும் விண்ணப்பிக்கவில்லை. இதனால் 1,300 இடங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்வரும் கல்வி ஆண்டில் பள்ளி குழந்தைகளுக்கு பாடப்புத்தங்கள் உரிய நேரத்தில் வழங்கப்படும். பி.யூ.கல்லூரி கல்வி வாரியத்தில் இருந்து வினாத்தாள் கசியவில்லை.இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தொழிற்படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பே பி.யூ.கல்லூரி 2–ம் ஆண்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.இவ்வாறு கிம்மனே ரத்னாகர் கூறினார்.