பள்ளிகளில் தினமும் தேசிய கீதம் பாட வேண்டும்:அதிகாரிகள் சரிபார்க்க உத்தரவு

சென்னை:'அனைத்து பள்ளிகளிலும், தேசிய கீதம் பாடப்படுகிறதா என்பதை அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையை சேர்ந்த, முன்னாள் ராணுவ வீரரும், ரயில்வே தீர்ப்பாய ஊழியருமான செல்வதிருமால் தாக்கல் செய்த
மனு:தேசிய கீதம் மற்றும் தேசிய கொடி பற்றிய போதிய அறிவு, மக்களுக்கு இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசு பள்ளிகள் மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், தினசரி தேசிய கீதம் பாடப்படுகிறது. தனியார் பள்ளிகளில், தேசிய கீதம் பாடப்படுவதில்லை; இசைக்கப்படுவதும் இல்லை.எனவே, காலை நேரத்தில், அனைத்து தனியார் பள்ளிகளிலும் தேசிய கீதம் பாடும்படி அல்லது இசைக்கும்படி உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: 'பள்ளிகளில் தேசிய கீதம் பாடப்பட வேண்டும்; பாடப்பட்டும் வருகிறது' என, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தேசிய கீதம் பாடப்படுவதை, அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

நடைமுறையில் பார்த்தால், தேசிய கீதம் பாடப்படுவதில்லை என, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு பள்ளியிலும், தேசிய கீதம் பாடப்படுகிறதா, இசைக்கப்படுகிறதா என்பதை எங்களால் சரி பார்க்க முடியாது. ஏனென்றால், தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்பதை, பள்ளிகள் தரப்பில் மறுக்கவில்லை.
அரசியல் சட்டத்தில் கூறியுள்ளதை கருத்தில் கொண்டு, தேசிய கீதம் மற்றும் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்த வேண்டும் என, நாங்கள் எதிர்பார்க்கிறோம். தனியார் பள்ளிகளில் தேசிய கீதம் பாடுவதை, பாடத்திட்டத்தில், ஒரு பகுதியாக பின்பற்ற வேண்டும். அதிகாரிகளும், பள்ளிகளில் தேசிய கீதம் பாடப்படுகிறதா என்பதை சரி பார்க்க முயற்சிகள் எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.