வாய்ப்புற்று நோயை தீர்க்கும் அருமருந்தாகும் வேப்பிலை! அண்ணாமலைப் பல்கலை. அறிவியலாளர்கள் கண்டுபிடிப்பு

அனைத்து நோய்களையும் தீர்க்கும் கற்பக மரமாக திகழும் வேப்பிலையின் இலை மற்றும் பூவிலிருந்து எடுக்கப்பட்ட தாவர வேதிப்பொருளான நிம்போலைடூ வாய்ப்புற்று நோயை குணமாக்கும் சக்தி கொண்டது என அண்ணாமலைப் பல்கலைக்கழக அறிவியலாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
இன்றளவில், வாய்ப்புற்று நோய்க்கு பல்வேறு சிகிச்சைகள் இருப்பினும் புற்று நோயாளிகளின் வாழ்நாள் திறன் மிகவும் குறைவாகவே உள்ளது.  அண்ணாமலைப் பல்கலைக்கழகம், உயிர் வேதியியல் மற்றும் உயிர் தொழில் நுட்பவியல் துறையை சேர்ந்த பேராசிரியர் நாகினி மற்றும் அவரது ஆராய்ச்சி குழுவானது வெள்ளெலியை பயன்படுத்தி வாய்ப்புற்று நோயின் போது ஏற்படும் தோலிமம் மாற்றத்தை விளக்கி உள்ளனர்.
இந்த ஆராய்ச்சி குழுவானது, நிம்போலைடூ புற்று நோய் செல்லை கொல்வதன் மூலமும் மற்றும் அதன் வளர்ச்சிப் பெருக்கத்தை தடுப்பதின் மூலமும் வாய்ப்புற்று நோயை தடுப்பதாக நிருபித்துள்ளனர்.  இந்த ஆராய்ச்சி கட்டுரையானது Scientific reports எனும் ஆராய்ச்சி பத்திரிக்கைகளில் வெளியாகி உள்ளது.  இந்த ஆராய்ச்சி முடிவில், வேப்பிலையின் புற்று நோய் எதிர்ப்பு செயல்பாடு குறித்து அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.  மனித மருத்துவ சோதனையின் பின் நிம்போலைடூ வாய்ப்புற்று நோய் சிகிச்சைக்கு பயன்படுத்தத்தக்கது என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.