௭வது சம்பளக் கமிஷனை கிடப்பில் போடுங்கள் விவசாய சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்

மதுரை;எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையை அமல்படுத்துதல், ரேஷனில் உள்நாட்டு விவசாய பொருட்களை மட்டும் விநியோகித்தல் உள்ளிட்ட பிரச்னைகளில் கட்சிகள் தங்களது நிலைப்பாட்டினை தெளிவுபடுத்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.


கூட்டமைப்பின் செயலாளர் நல்லசாமி கூறியதாவது: ௭வது சம்பளக் கமிஷன் பரிந்துரையோடு, எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையையும் ஒரே நேரத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும், அதுவரை ௭வது சம்பளக் கமிஷனை கிடப்பில் போட வேண்டும். கள் இறக்குவதை தடுத்தல், அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமையை பறிப்பதாகும். இந்தியா வல்லரசு ஆக வேண்டுமெனில் எத்தனாலை வாகன எரிபொருளாக பயன்படுத்த வேண்டும்.

பட்ஜெட்டில் உணவு மானியமாக ரூ.5,500 கோடி தமிழக அரசாலும், ரூ.1.4 லட்சம் கோடி மத்திய அரசாலும் வழங்கப்படுகிறது. வெளிநாட்டில் உற்பத்தியாகும் பாமாயில், தமிழகத்தில் ௨ கோடியே ௨ லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்படுகிறது. இதனால் மானியத் தொகையில் பல நுாறு கோடி ரூபாய் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு செல்கிறது. ஆனால், தமிழகத்தில் தயாராகும் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவை ரேஷனில் விற்கப்படுவதில்லை. இதில் பெரிய சதி உள்ளது, என்றார்.

தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பாண்டியன் கூறியதாவது: டிராக்டர் கடன் வாங்கிய தஞ்சாவூர் விவசாயி பாலன் தாக்கப்பட்டது, சட்டத்திற்கு புறம்பானது. இது குறித்து தேர்தல் கமிஷனிடம் புகார் அளித்துள்ளோம். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தஞ்சாவூரில் கூடி முடிவெடுப்போம், என்றார்.
உழவர் உழைப்பாளர் சங்க மாநில துணைத் தலைவர் ராவணன் மற்றும் தமிழ்நாடு
கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.