திண்டுக்கல்லில் சின்னம்மை:பள்ளிகளுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை

திண்டுக்கல்:'திண்டுக்கல்லில் வேகமாக சின்னம்மை நோய் பரவி வருவதால் பாதிக்கப்பட்ட மாணவர்களை பள்ளியில் அனுமதிக்க வேண்டாம்' என சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள், 23 பேரூராட்சிகள், 306 ஊராட்சிகள் உள்ளன. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் 'ரோபலா' வைரஸ் சின்னம்மை நோயை ஏற்படுத்துகிறது.


இப்பாதிப்பு ஏற்படுவோருக்கு காய்ச்சல், தொண்டையில் வலி, கசப்பு, உடலில் கொப்பளம், அரிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும்.இந்த நோய் கிருமி காற்றில் பரவக்கூடியது. இதனால் ஒரு குழந்தைக்கு வந்தால், அந்த வீடு, தெரு முழுவதும் எளிதில் பரவ வாய்ப்புள்ளது.
திண்டுக்கல்லில் பாதிப்பு
கடந்த சில நாட்களாக திண்டுக்கல் மாவட்ட
கிராமங்களில் அதிகளவு இந்த நோய் பரவி வருகிறது. சுகாதாரத்துறையினர் ஒரு கிராமத்திற்கு குறைந்தது 5 முதல் 7 பேர் வரை சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை
கண்டறிந்துள்ளனர்.

இந்நோய் பாதிப்பு பள்ளிகளில் மாணவர்களிடையே எளிதில் பரவ வாய்ப்பு உள்ளது. தேர்வு நேரத்தில் இது பெரும் பிரச்னையை ஏற்படுத்தவும் வாய்ப்புண்டு. இதனால் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சின்னம்மை பாதித்த மாணவர்களை தனிமைப்படுத்த வேண்டும். முடிந்தால் விடுமுறை அளித்து வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சுகாதார ஆய்வாளர் கமாலுதீன் கூறியதாவது: சின்னம்மை பாதிப்பை தடுக்க இளநீர், தண்ணீர் பழம் மற்றும் நீராகாரங்களை பருக வேண்டும். வெயிலில் மாணவர்கள், குழந்தைகள் அதிகநேரம் விளையாடுவதை தடுக்க வேண்டும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் 'ஏ சைக்கிலோவிர்' என்ற மாத்திரை உள்ளது. இது சின்னம்மை நோயை 5 நாட்களுக்குள் கட்டுப்படுத்தும். கொப்புளங்கள் பெரிதாகாது, என்றார்.