கல்வி கட்டண கமிட்டி மூடப்படும் அபாயம்!!!

தனியார் பள்ளி கல்வி கட்டண நிர்ணய கமிட்டியில், மூன்று மாதமாக, நீதிபதி இல்லை. எனவே, புகார் அளிக்க முடியாமல் பெற்றோர் தவிக்கின்றனர். தற்போது பணியில் உள்ள சட்ட அதிகாரியும், நாளை ஓய்வு பெற உள்ளார். எனவே, கல்வி கட்டண கமிட்டி மூடப்படும் அபாயம்
ஏற்பட்டுள்ளது.
கடந்த, 2009ல், கட்டாய கல்வி உரிமை சட்டம் அமலுக்கு வந்ததும், தமிழக அரசு சார்பில், சுயநிதி பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய கமிட்டி அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில், இந்த கமிட்டி செயல்பட்டது. பள்ளிகளின் உள்கட்டமைப்பு அடிப்பயில், கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. தனியார் பள்ளிகள் தரப்பில் இருந்து பல வகையான நெருக்கடிகள் வந்ததால், நீதிபதி கோவிந்தராஜன் பதவியில் இருந்து விலகினார்.
பின், உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி ரவிராஜ பாண்டியன் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பதவி வகித்து, கல்வி கட்டணம் தொடர்பானபுகார்களை விசாரித்து தீர்ப்பு வழங்கினார்.ஆட்சி மாற்றம் வந்ததும், 2012ல் ரவிராஜ பாண்டியன் பதவி விலகினார்; 2012 ஜனவரியில், ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு, கல்வி கட்டண கமிட்டி தலைவரானார்; மூன்று ஆண்டுகளாக அப்பொறுப்பில் இருந்தார்.
கடந்த ஆண்டு, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.., பள்ளிகளில் அதிக கட்டணம் வாங்குவது தொடர்பாக நடந்த போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வந்து, அந்த பள்ளிகள் மீது, தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். நீதிபதி சிங்காரவேலு, 2015 டிசம்பர், 31ல் ஓய்வு பெற்றார். அந்த இடத்தில்,இதுவரை எந்த நீதிபதியும் நியமிக்கப்படவில்லை. நிலுவையில் இருக்கும், ஒரு சில வழக்குகள் மற்றும் புகார்களை, கமிட்டியின் சிறப்பு சட்ட அதிகாரி மனோகரன் பெற்று வருகிறார். அவருக்கும் பதவிக்காலம், நாளை முடிகிறது. எனவே, கட்டண கமிட்டி, எந்த அதிகாரியும் இன்றி மூடப்படும் நிலைக்கு வந்துள்ளது
தமிழக பள்ளிக்கல்வித்துறை, ஐந்து ஆண்டுகள் அலட்சியமாக நடந்து வந்தது. அதற்கு, இதுவே உச்சபட்ச உதாரணம். மாணவர் நலன் கருதி, கல்வித்துறையை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் நிர்வாகம் நடக்கவில்லை. புதிய கல்வி ஆண்டுக்கு, தனியார் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை நடந்து, கட்டணம் வசூலித்து வருகின்றனர். ஆனால், அதிக
கட்டண வசூல் குறித்து புகார் அளிக்க கூட வழியில்லை.

பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள்