பிளஸ்-2 கணித தேர்வு கடினமா? எளிதா?- மாணவர்கள் இடையே மாறுபட்ட கருத்து

சென்டம் எடுப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்று கணிப்பு
பிளஸ்-2 கணித தேர்வு கடினமாக இருந்ததா? அல்லது எளிதாக இருந்ததா? என்பதில் மாணவர்கள் இடையே மாறுபட்ட கருத்து நிலவு கிறது.

இதற்கிடையே, தேர்வில் ஒருசில வினாக்கள் கடினமாக இருந்ததால் இந்த ஆண்டு சென்டம் எடுக்கும் மாணவர் களின் எண்ணிக்கை குறையும் என்று கணித ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வரு கிறது. நேற்று கணிதம், விலங் கியல், நுண்ணுயிரியல், நியூட்ரிசன் மற்றும் டயட்டிக்ஸ் பாடங்களுக் கான தேர்வுகள் நடைபெற்றன. தொழிற்கல்வி படிப்புகளுக்கான கட் ஆப் மதிப்பெண்ணுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங் கியல் தேர்வுகளின் மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படு கின்றன. இதனால், இந்த தேர்வுகள் நடைபெறும் நாட்களில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகம் எழுகின்றன. கடந்த 14-ம் தேதி நடந்த வேதியியல் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக தேர்வெழுதிய மாணவ-மாணவிகள் கவலை தெரிவித்தனர்.
இந்நிலையில், பொறியியல் மாணவர் சேர்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கும் கணித தேர்வு எப்படி இருக்குமோ என்ற சந்தேகம் மாணவர்கள் மத்தியில் எழுந்தது. 14-ம் தேதி நடைபெற்ற சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு கணித தேர்வு மிகவும் கடினமாக இருந்த தால் அவர்கள் சற்று அச்சப்படவே செய்தனர். ஆனால், பிளஸ்-2 கணித தேர்வில் ஒருசில வினாக் கள் சற்று கடினமாக இருந்தாலும் ஒட்டுமொத்தமாக எளிதாகவே இருந்தன என்று தேர்வெழுதிய மாணவ-மாணவிகள் தெரிவித்த னர். ஒருசிலர் தேர்வு கடினமாக இருந்ததாக தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் கூறும்போது, “6 மதிப்பெண், 10 மதிப்பெண் கேள்விகளில் ஒருசில சற்று கடினமாக இருந்தன. அதேபோல், ஒரு மதிப்பெண் கேள்வி பகுதி யிலும் ஒருசில வினாக்களுக்கு விடையளிக்க சற்று கடினமாக இருந்தது” என்றனர்.
தேர்வு குறித்து சென்னை மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் காமராஜ் கூறும்போது, “ஒருசில கேள்விகள் சற்று கடினமாக இருந்தாலும் தேர்வுக்கு நல்ல முறையில் பயிற்சி எடுத்த மாணவர்கள் அவற்றுக்கு எளிதாக விடையளித்துவிடுவர். அனைத்து கேள்விகளையும் நேரடியாக கேட்காமல் மாணவர் களை சிந்திக்க வைக்கும் வகை யில் கேட்கப்பட்டன. 190-க்கு மேல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம். எனினும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 200-க்கு 200 மதிப்பெண் (சென்டம்) எடுப்பவர்களின் எண்ணிக்கை சற்று குறையவே செய்யும்” என்றார்.
அரசு உதவி பெறும் பள்ளியின் கணித ஆசிரியர் ஒருவர் தேர்வு குறித்து கூறும்போது, “கணிதத் தேர்வை எளிது என்று சொல்லிவிட முடியாது. சற்று கடினம்தான். கிராமப்புற பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு நிச்சயம் கடினமாகத்தான் இருந்திருக்கும். கண்டிப்பாக இந்த ஆண்டு 200-க்கு 200 எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும்” என்றார்.
இதற்கிடையே, வெள்ளம் பாதித்த மாணவர்களின் நலன் கருதி அரசு வழங்கிய சிறப்பு கையேட்டில் இருந்து எதிர்பார்த்த அளவுக்கு வினாக்கள் வரவில்லை என்று மாணவர்கள் குறைபட்டுக் கொண்டனர். இதே கருத்தை ஆசிரியர்களும் தெரிவித்தனர்.
கட் ஆப் குறையலாம்
ஏற்கெனவே நடந்து முடிந்த வேதியியல் தேர்வு மிகவும் கடினம் என்ற கருத்து நிலவு கிறது. இந்த நிலையில், கணித தேர்வு சற்று கடினம் என்றும், 200-க்கு 200 எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறையும் என்று சொல்லப் படுவதாலும், இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் குறையலாம்.
நேற்று நடந்த மற்றொரு தேர்வான விலங்கியல் தேர்வு எளிதாக இருந்ததாக பெரும் பாலான மாணவ-மாணவிகள் தெரிவித்தனர். அரசு வழங்கி யிருந்த சிறப்பு கற்றல் கையேட்டில் இருந்து வினாக்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லை என்று குற்றச்சாட்டை விலங்கியல் தேர்வெழுதிய மாணவர்களும் முன்வைத்தனர்.