கண்காணிப்பாளர்கள் வராததால் பிளஸ் 2 தேர்வு தாமதம்

விழுப்புரம் அருகே தேர்வு மையத்துக்கு அறை கண்காணிப்பாளர்கள் வராததால் பிளஸ் 2 தேர்வு அரை மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. இதனால் மாணவ, மாணவிகள் அதிருப்தியடைந்தனர்.
விழுப்புரம் அருகேயுள்ள மாம்பழப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்துக்கு வெள்ளிக்கிழமை காலை மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வெழுத சென்றிருந்தனர். ஆனால், தேர்வு மையத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே (காலை 9 மணி) வரவேண்டிய தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் (ஆசிரியர்கள்) 17 பேரும் திடீரென வராததால், தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த முதன்மைக் கல்வி அலுவலர் சா.மார்ஸ் மற்றும் பறக்கும் படை குழுவினர் மாம்பழப்பட்டு தேர்வு மையத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். அந்தத் தேர்வு மைய கண்காணிப்பாளரான திருநாவலூர் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் தங்கராஜ், வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள தேர்வு குறித்து, தேர்வு அறை கண்காணிப்பாளர்களுக்கு தகவல் கொடுக்காமல் இருந்ததும், ஆசிரியர்களும் கவனக்குறைவாக வராமல் இருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து அருகே உள்ள பெரும்பாக்கம், கல்பட்டு, காணை அரசுப் பள்ளிகளில் இருந்த ஆசிரியர்கள் அவசர, அவசரமாக வரவழைக்கப்பட்டு, மாம்பழப்பட்டு அரசுப் பள்ளி தேர்வு மையத்தில் தேர்வு தொடங்கியது. காலை 10 மணிக்குத் தொடங்க வேண்டிய தேர்வு, அரை மணி நேரம் தாமதமாக தொடங்கப்பட்டதாக மாணவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
மாணவ, மாணவிகளுக்கு உரிய நேரம் கூடுதலாக வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர் சா.மார்ஸிடம் கேட்டபோது, தேர்வு முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர், அறை கண்காணிப்பாளர்களிடம் விசாரித்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.