பிளஸ் 2 வணிகவியல் தேர்வு:சராசரி மாணவர்களும் 'குஷி'

பிளஸ் 2 பொதுத்தேர்வில், நேற்று வணிகவியல் பிரிவு மாணவர்களுக்கு, 'காமர்ஸ்' தேர்வு நடந்தது. இதில், வினாத்தாள் எளிமையாக இருந்ததாக, மாணவர்கள், ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

மொத்தமுள்ள, 200 மதிப்பெண்களில், இரண்டாம் பிரிவு (பார்ட் பி) பகுதியில், தலா, நான்கு மதிப்பெண்களுக்கு, 10 கேள்விகளை எழுத வேண்டும். இதில், 'சாய்ஸ்' அடிப்படையில் இடம் பெற்ற, 15 கேள்விகளும், பாடங்களின் உள்பகுதியில் இருந்து கேட்கப்பட்டிருந்தன. சராசரி மாணவரும் தேர்ச்சி பெறும் வகையில், நேற்றைய தேர்வு அமைந்து இருந்தது.

இதுகுறித்து, வணிகவியல் ஆசிரியர் எஸ்.என்.ஜனார்த்தனன் கூறும்போது, ''புளூ பிரின்டில் கூறியபடி, புத்தகத்தின் முதல், மூன்று பாடங்களில் இருந்து மட்டுமே, 109 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இடம் பெற்றன. அதனால், முதல் மூன்று பாடம் படித்தாலே, அவர்களுக்கு தேர்ச்சி உறுதி. வணிகவியலை பொறுத்தவரை, அதிக தேர்ச்சி கிடைக்கும் வாய்ப்புள்ளது,'' என்றார்.
நேற்றைய தேர்வில், நான்கு பள்ளி மாணவர் உட்பட, ஒன்பது பேர் காப்பியடித்து பிடிபட்டதாக, அரசு தேர்வுத் துறை இயக்ககம் தெரிவித்து உள்ளது.-