ஏப்ரல் 15ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்: வாக்காளர் அட்டையை எளிதாக பெற 363 மையங்களில் சிறப்பு ஏற்பாடு; ஆன்லைன் மூலம் மனு செய்தால் அடையாள அட்டை வீட்டுக்கே அனுப்பப்படும்

ராஜேஷ் லக்கானி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தேர்தலில் 100 சதவீதம் நேர்மை, 100 சதவீதம் வாக்குப்பதிவு இருக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் இலக்கு. வாக்காளர் பட்டியலில் அனைவரும் தங்கள் பெயரை சேர்த்துக்கொள்ள வேண்டும். இதுவரையில் பெயர் சேர்க்காதவர்கள் ஏப்ரல் 15–ந் தேதிக்குள் பெயர் சேர்க்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திலும் விண்ணப்பம் செய்யலாம். ‘ஆண்டிராய்டு’ செல்போன் மூலம் tnelectionplaystore என்ற ‘ஆப்’பை பதவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
363 அலுவலகங்கள்
புதிய முயற்சியாக எளிய முறையில் வாக்காளர் அட்டை பெற வாக்காளர் சேவை மையம் என்ற மையத்தை வரும் 14–ந் தேதியில் (திங்கட்கிழமை) இருந்து தொடங்க இருக்கிறோம்.
இந்த மையம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தாசில்தார் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் (ஆர்.டி.ஓ), கலெக்டர் அலுவலகம் ஆகிய 363 இடங்களில் தனி அறையில் செயல்படும்.
ஸ்பீட் போஸ்ட்டில் அட்டை
ஒவ்வொரு மையத்திலும் இரண்டு அலுவலர்கள் இருப்பார்கள். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், திருத்தங்கள் செய்தல், புதிதாக வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தல், பழைய அட்டையை மாற்றுதல் போன்ற தேவைகளுக்கு இந்த மையத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.
வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கவேண்டும் என்றால் அந்த நபரோ அல்லது அவரது குடும்ப உறுப்பினரோ வரவேண்டும். புதிதாக அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கிறவர்களுக்கு அது இலவசமாக வழங்கப்படும். அட்டையை மாற்ற வேண்டுமென்றால் ரூ.25 கட்டணம் செலுத்தவேண்டும்.
ஆன்லைனில் அட்டைக்காக விண்ணப்பித்து அதை வாக்காளர்கள் பெறுவதற்கு புதிய முறையை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். அதன்படி, தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் விண்ணப்பித்தால் ரூ.25–ம், அதோடு சேர்த்து ரூ.40–ம் செலுத்த வேண்டும். ரூ.65 செலுத்தியவர்களுக்கு ஸ்பீட் போஸ்ட் மூலம் அந்த அட்டை அவர்களின் முகவரிக்கு வந்து சேர்ந்துவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
My Blogger TricksAll Blogger TricksLatest Tips and Tricks