மதுரையில் 10 ஆண்டுகளில் அதிகபட்ச வெப்பநிலை

கடந்த 10 ஆண்டுகளில் நடப்பு மார்ச் மாதத்தில் மதுரையில் அதிகபட்சமாக வெப்பநிலை பதிவாகியுள்ளது வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தான் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும். இந்த மாதங்களில் வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கும்
. ஆனால், நடப்பு ஆண்டில் பிப்ரவரி இறுதியில் இருந்தே அதிக வெயில் இருந்து வருகிறது. அதிலும் மார்ச் இரண்டாவது வாரத்தில் தமிழகத்தின் பல நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிக வெப்பநிலை பதிவானது. கோடைக்கு முன்பு கடும் வெப்பம் நிலவியதால், பல இடங்களில் அனல் காற்று வீசியது.
             பருவநிலை மாற்றம் சீதோஷண மாறுபாடுகளை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாக தென்மேற்குப் பருவமழை (ஜூன் முதல் செப்டம்பர் வரை), வடகிழக்கு பருவ மழை (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) காலங்களில் அதிக மழை பெய்வது வழக்கம். தமிழகத்துக்கு வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் அதிக மழை கிடைக்கும். ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் குளிர் காலமாகவும், மார்ச் முதல் மே வரை கோடை காலமாகவும் உள்ளது. ஆனால், அண்மைக்காலமாக இந்த சீதோஷண நிலையில் மாறுபாடுகள் இருந்து வருகிறது.
        அந்த வகையில், நடப்பு ஆண்டில் மார்ச் மாதத்திலேயே அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. வெய்யிலின் உக்கிரம் காரணமாக, மதிய நேரங்களில் மக்களின் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. கத்திரிக்கு முன்பே வெயில் கொளுத்துவதாக மக்கள் புலம்புகின்றனர்.
           வழக்கமாக ஏப்ரல் இறுதி அல்லது மே மாதங்களில் தான் மதுரையில் 105 டிகிரி பாரன்ஹீட் மற்றும் அதற்கு மேல் வெப்பநிலை பதிவாகும். ஆனால், நடப்பு ஆண்டில் மார்ச் 15 ஆம் தேதியில் இருந்தே 100 டிகிரி பாரன்ஹீட்-க்கு மேல் வெப்பநிலை பதிவாகி வருகிறது. அதிகபட்சமாக மார்ச் 23 ஆம் தேதி 106 டிகிரி பதிவாகியுள்ளது.
        சென்னை வானிலை மையத்தின் புள்ளி விவரங்களின்படி, கடந்த 10 ஆண்டுகளை ஒப்பிடும்போது நடப்பு மார்ச் மாதத்தில் தான் அதிகபட்சமாக 106 டிகிரி வெயில் (மார்ச் 23) பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு அதிகபட்சமாக, 2013 மார்ச் 30-இல் 103 டிகிரி பாரன்ஹீட், 2014 மார்ச் 30-இல் 102 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவில் தான் இருந்து வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் மதுரையில் மார்ச் மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை
ஆண்டு   வெப்பநிலை (பாரன்ஹீட்)
2006   -  99 (மார்ச் 28)
2007   -  100 (மார்ச் 26)
2008   - 94 (மார்ச் 28)
2009 - 100 (மார்ச் 2)
2010 - 102 (மார்ச் 31)
2011 - 98 (மார்ச் 31)
2012 - 102 (மார்ச் 22)
2013 - 103 (மார்ச் 30)
2014 - 102 (மார்ச் 30)
2015  - 101 (மார்ச் 24)