10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு: மாவட்ட ஆட்சியரிடம் புகார்

தேனி மாவட்டம், கூடலூரில் உள்ள அரசு சுயஉதவி பெறும் பள்ளியில் படிக்கும் 10-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் 10 பேரை பொதுத் தேர்வு எழுதுவதற்கு பள்ளி நிர்வாகம் அனுமதிக்க மறுப்பதாகக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை புகார் மனு அளிக்கப்பட்டது.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடலூரைச் சேர்ந்த மாணவிகள் எம்.சுமித்ரா, எம்.பிரித்தா, எம்.சுவாதி, மாணவர்கள் எம்.பிரகாஷ், ஜெ.மணி உள்ளிட்ட 10 பேர் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பார்த்திபனிடம் அளித்த மனுவில், கூடலூர் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்த எங்களை, பொதுத் தேர்வு எழுத பள்ளி நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர். 


இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிந்துரை செய்தார்.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.வாசு கூறுகையில், பொதுத் தேர்வு எழுத அனுமதி மறுப்பதாகக் கூறப்படும் மாணவ, மாணவிகளின் பெயர்கள் தேர்வு எழுதுவோர் பட்டியலில் இல்லை. இவர்கள் மாற்றுச் சான்றிதழ் பெற்று, பள்ளியில் இருந்து விலகிவிட்டதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.