சிறப்பு வகுப்புக்கு செல்லாமல் கட் அடித்த மாணவர்களை, செய்யாறு அரசு பள்ளி
ஆசிரியர்கள் தேடித் தேடி அழைத்து, பாடம் நடத்திய வினோதம் நடந்திருக்கிறது.
இது, 100 சதவீத தேர்ச்சிக்கான தீவிர முயற்சி என்று, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அரசு உயர்நிலைப்பள்ளியில், 1௦ம் வகுப்பில்
மட்டும், 200 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில், 100 சதவீத
தேர்ச்சிக்காக, பல்வேறு நடவடிக்கைகைள, ஆசிரியர்கள் எடுத்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் அரையாண்டு தேர்வுக்கு பின், பொதுத் தேர்வுக்கு மாணவர்களை
தயார்படுத்தும் வகையில், அனைத்து பாடங்களுக்கும் மாணவர்களுக்கு சிறப்பு
வகுப்புகள், பெற்றோர் ஒத்துழைப்புடன் பள்ளி நிர்வாகம் நடத்தி வருகிறது.
குறிப்பாக, ஆங்கிலம், கணக்கு பாடங்களில் சரியாக படிக்காத மாணவர்களுக்கு,
சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே,
1௦ம் வகுப்பு மாணவர்களுக்கு, கடந்த, 15ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கியது.
முதல் நாளில், தமிழ் முதல் தாள், மறுநாள், 16ம் தேதி தமிழ் இரண்டாம் தாள்
தேர்வு நடந்தது. இதையடுத்து, வரும் 22ம் தேதி ஆங்கிலம் முதல் தாள், 27ம்
தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வும் நடத்தப்பட உள்ளது. ஆங்கிலப்
பாடத்தில் அனைத்து மாணவர்களும், முழு தேர்ச்சி பெற ஆசிரியர்கள் முயற்சி
எடுத்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் ஆங்கிலம் சிறப்பு வகுப்பு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு
இருந்தது. காலை 10:00 மணி ஆகியும் கூட, மாணவர்கள் யாரும் வரவில்லை.
இதனால், அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், கிராமம் கிராமமாக மாணவர்களின்
வீடுகளுக்குச் சென்று, அவர்களை தேடிப்பிடித்து அழைத்து வந்தனர்.
அப்போது, ஒரு சில மாணவர்கள், தங்களது வீடுகளில் இருந்து வெளியே
சென்றிருந்தனர். இதையடுத்து, அவர்கள் எங்கு சென்று இருக்கிறார்கள்? என்று,
அவர்களின் பெற்றோரிடம் ஆசிரியர்கள் கேட்டு அறிந்தனர்.
அதைத்தொடர்ந்து, மாணவர்களின் நண்பர்கள் வீடு, செங்கல் சூளை, சுடுகாடு,
ஏரிக்கரை, குளம், கிணறு, பம்ப் செட்டு மற்றும் வயலவெளி பகுதிகளுக்குச்
சென்று, அங்கிருந்த மாணவர்களுக்கு அறிவுரை கூறி, சிறப்பு வகுப்புக்கு
அழைத்து வந்தனர். பின், அவர்களுக்கு பாடம் நடத்தினர்.
அரசு பள்ளி ஆசிரியர்களில் பெரும்பாலானோர், பள்ளி நேரத்திலேயே ஒழுங்காக
பாடத்தை நடத்தாமல், வீணாக நேரத்தை கழித்து விட்டுச் செல்வதைத்தான்,
கண்கூடாக பார்க்க முடிகிறது.
இந்நிலையில், விடுமுறை நாளில் சிறப்பு வகுப்புக்காக, மாணவர்களை தேடித் தேடி
அழைத்து வந்து, அவர்களுக்கு அறிவுரையும் கூறி, பாடம் நடத்திய செய்யாறு
ஆசிரியர்களின் பணியை, அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.மாணவர்களை தேடிய
அரசு பள்ளி ஆசிரியர்கள்