நாளை ரயில்வே பட்ஜெட்: தென் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன?

கடந்த, 2015 - 16 ரயில்வே பட்ஜெட்டில், புதிய ரயில் பாதைகளுக்கு, 23 கோடி; அகல ரயில் பாதைக்கு, 344 கோடி; இரட்டை ரயில் பாதைக்கு, 672 கோடி உட்பட, தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ரயில்வே திட்டங்கள் மற்றும் பணிகளுக்கென மொத்தம், 2,434 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட், பார்லிமென்டில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது.இதில், கடந்த ஆண்டை போலவே, தமிழகத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.கடந்த பட்ஜெட்டில், புதிய ரயில்கள் மற்றும் புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு, அதிக முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. மாறாக, ஏற்கனவே நிலுவையில் இருக்கும், அகல மற்றும் இரட்டை ரயில் பாதை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து பணி நடக்கிறது; பல பாதைகள் பயன்பாட்டுக்கும் வந்துள்ளன.எனவே, நாளைய பட்ஜெட்டில், கடந்த முறை விடுபட்ட திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மேலும், புதிய ரயில் சேவை, சேவை நீட்டிப்பு, புதிய ரயில் பாதை திட்டங்கள் அறிவிக்கப்படும் பட்சத்தில், தென் மாவட்ட மக்களின் கோரிக்கைகள் நிறைவேற வாய்ப்பு உள்ளது.


நிதி ஒதுக்க வேண்டிய திட்டங்கள்


● மதுரை - குமரி இரட்டை ரயில் பாதைக்கான திட்ட மதிப்பீடு, 2,000 கோடி ரூபாய். 2015 - 16 பட்ஜெட்டில், 77 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கிய நிலையில், இம்முறையாவது போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்
● செங்கோட்டை - புனலுார் அகல ரயில் பாதை பணிக்கு, 100 கோடி ரூபாய்
ஒதுக்கீடு அவசியம்
*தென் மாவட்ட மக்கள் சபரிமலை சென்று வர வசதியாக, ரயில் பாதை திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டது. திண்டுக்கல் - பெரியகுளம் - தேனி - போடி - குமுளி (120 கி.மீ.,) செல்லும் இந்த பாதையை, 1,000 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நிறைவேற்ற முடியும். தெற்கு ரயில்வே சார்பில் நான்கு முறை ஆய்வு நடத்தப்பட்டு, இதற்கான அறிக்கையும், ரயில்வே வாரியத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தையும் அறிவிக்க வேண்டும்
* திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் ரயில் இன்ஜின் தொழிற்சாலை அமைக்கும் திட்டம் குறித்த அறிவிப்பும் வெளியாக வேண்டும்
*கன்னியாகுமரி, நாகர்கோவில் ரயில் நிலையங்களில் இருந்து, அதிகளவில் ரயில்கள் இயக்கும் வகையில், அந்த ரயில் நிலையங்களை முனையமாக மாற்றும் திட்டத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்
* மதுரை - போடி அகல ரயில் பாதை திட்டம் அறிவிக்கப்பட்ட போதிலும், திட்ட மதிப்பீட்டு அனுமதி வழங்கவில்லை. அனுமதி வழங்குவதுடன், போதிய நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

கேரளா - வேளாங்கண்ணி வாராந்திர ரயில்; எழும்பூர் - நாகர்கோவில் இடையே, வார இறுதியில் சிறப்பு ரயில்; சென்னை - திருச்செந்துார் இடையே, விழுப்புரம் - விருத்தாசலம் - லால்குடி - திருச்சி வழியாக ரயில்; கன்னியாகுமரி - டில்லி திருக்குறள் வாரம் இருமுறை ரயிலை, தினசரி ரயிலாக இயக்குவது தொடர்பான அறிவிப்புகள், பட்ஜெட்டில் வெளியாக வேண்டும் என, எதிர்பார்க்கிறோம்.
ஜே.சூசைராஜ் பொதுச்செயலர்,தென் மாவட்ட ரயில் பயணிகள் சங்கம்