அரசு ஊழியர்களின் போராட்டம் தொடருமா? வாபஸ் ஆகுமா? செயற்குழு கூட்டத்தில் இன்று முக்கிய முடிவு.

சட்டசபையில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த நிர்வாக தீர்ப்பாயம் உள்ளிட்ட சில கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
 
 
            இதனால் போராட்டம் தொடருமா? வாபஸ் ஆகுமா? என்பது குறித்து இன்று செயற்குழு கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. அரசு ஊழியர்கள் போராட்டம் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10-ந்தேதி முதல் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மறியல் போராட்டம், காத்திருப்பு போராட்டம் என வெவ்வேறு வடிவங்களில் தங்களுடைய ஆதரவு சங்கங்களுடன் இணைந்து அரசு ஊழியர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் காத்திருப்பு போராட்டத்தையொட்டி, எழிலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் பெண்கள் உள்பட 150-பேர் தங்கியிருந்தனர். அவர்கள் காலையில் வழக்கம்போல் நேற்று போராட்டத்தை தொடர்ந்தனர். தங்கள் வீடுகளுக்கு சென்று வந்த ஊழியர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். காத்திருப்பு போராட்டம் 10-வது நாளான நேற்று சென்னை எழிலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தை 2-வது நாளாக தொடர்ந்தனர். போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். எழிலக வளாகத்தில் திரண்ட அரசு ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் எழிலக வளாகத்திலேயே அவர்கள் உணவு சமைத்து சாப்பிட்டனர். சட்டசபையில் அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் தொடர்பான சில முக்கிய அம்சங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார். இதில் சில கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஏகமனதாக வரவேற்றுள்ளது. போராட்டம் தொடருமா? வாபஸ் ஆகுமா? அதே சமயத்தில் சில கோரிக்கைகளுக்கு கடுமையான எதிர்ப்பும் தெரிவித்துள்ளது. இந்த சூழலில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் இன்று (சனிக்கிழமை) சென்னையில் நடைபெற உள்ளது. இதில் போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்படுமா? அல்லது வாபஸ் பெறப்படுமா? என்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. போராட்டத்துக்கு வெற்றி இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தலைவர் தமிழ்ச்செல்வி நிருபர்களிடம் கூறியதாவது:- அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் 70 துறைகளை சேர்ந்த ஊழியர் சங்கங்கள் ஈடுபட்டுள்ளன. தமிழகம் முழுவதும் இந்த போராட்டத்தில் மொத்தம் 5 லட்சம் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் எழிலக வளாகம், பிற இடங்களில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 1½ லட்சம் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசின் அறிவிப்புகள் எங்களுடைய போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. நிர்வாக தீர்ப்பாயம் உள்ளிட்ட சில அறிவிப்புகள் வரவேற்கும் விதமாக உள்ளது. அதே சமயத்தில் குடும்ப நல திட்டம் உள்ளிட்ட சில அறிவிப்புகள் ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது. நிர்வாக தீர்ப்பாயம் தொடர்பான அறிவிப்பை முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம். செயற்குழு கூட்டம் எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக அரசின் சில அறிவிப்புகள் பரிசீலிக்கப்படும் வகையில் உள்ளது. சில அறிவிப்புகள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படும்படி இல்லை. பிற சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்புகள் எப்படி உள்ளது, அதன் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அந்தந்த சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசிக்கப்படும். சென்னையில் இன்று (சனிக்கிழமை) காலையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டமும், மாலையில் போராட்டக்குழுவின் கூட்டமும் நடைபெறும். இதில் அரசு ஊழியர்களின் போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்படுமா? அல்லது வாபஸ் பெறப்படுமா? என்ற நிலைப்பாடு குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.