சென்னை:தமிழகத்தில் அரசு ஊழியர்களின்,
'ஸ்டிரைக்' நேற்று, எட்டாவது நாளாக நீடித்தது. மாநிலம் முழுவதும் மறியலில்
ஈடுபட்ட, 50 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
பட்ஜெட் ஏமாற்றம்:
கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு
ஊழியர் சங்கத்தினர், பிப்., 10ல், ஸ்டிரைக் துவக்கினர். இடைக்கால
பட்ஜெட்டில், கோரிக்கைகள் ஏற்கும் அறிவிப்பை அரசு வெளியிடும் என,
எதிர்பார்த்தனர். ஆனால், இரண்டு நாட்களாக, அரசு எந்த
அறிவிப்புகளையும்வெளியிடவில்லை. இதனால், ஆசிரியர்களுடன் இணைந்து, அரசு
ஊழியர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். நேற்றும், தமிழகம் முழுவதும்
மறியல் போராட்டங்கள் நடந்தன. சென்னையில், 500 பேர் உட்பட, தமிழகம்
முழுவதும் மறியல் செய்த, 50 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
மாற்றுத்திறனாளிகள் கைது:
'அரசுப் பணிகளில், 3 சதவீத வேலை வாய்ப்பு
வழங்க வேண்டும்; மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்' என்பது
உள்ளிட்ட, பல கோரிக்கைகளை முன்வைத்து, மாற்றுத் திறனுடையோர் சங்கங்கள்
நேற்று, கோட்டை நோக்கி பேரணி அறிவித்திருந்தன.இதனால், கோட்டை நோக்கி வந்த
மாற்றுத் திறனாளிகளை, வழியிலேயே போலீசார் மடக்கி, 600க்கும் மேற்பட்டோரை
கைது செய்தனர்; அனைவரும் மாலையில் விடுவிக்கப் பட்டனர்.