ஊழியர் 'ஸ்டிரைக்' நீடிப்பு ரூ.4,000 கோடி வரி வசூல் பாதிப்பு

அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்பிய நிலையில், வணிக வரி ஊழியர்களின், வேலை நிறுத்தம், 20 நாட்களாக நீடிக்கிறது. 'திருத்திய முதுநிலை பட்டியலை வெளியிட வேண்டும்; காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்' என்பது உட்பட, பல கோரிக்கைகளை வலியுறுத்தி, வணிக வரித்துறை ஊழியர்கள், பிப்., 3 முதல், போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இதற்கிடையில், அரசு ஊழியர்களும், வேலை நிறுத்தம் அறிவித்ததால், அவர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தினர். சட்டசபையில், 110 விதியின் கீழ், அரசு ஊழியர்களுக்கான சலுகைகளை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதனால், அரசு ஊழியர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர். ஆனாலும், வணிக வரித்துறை ஊழியர்கள் பணிக்கு திரும்பவில்லை. அவர்களின் வேலை நிறுத்தம், 20வது நாளாக நேற்றும் நீடித்தது; தற்போது, சாகும் வரை உண்ணாவிரதம் துவக்கி உள்ளனர்.
இவர்களின் வேலை நிறுத்தத்தால், மாநிலம் முழுவதும் உள்ள, 560 வணிக வரி அலுவலகங்களும் முடங்கி, 4,000 கோடி ரூபாய் வரி வசூல் பாதித்து
உள்ளது.


முழுவீச்சில் அலுவலகங்கள்

அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால், பிப்., 10 முதல், அரசு அலுவலகங்கள் முடங்கின. வேலை நிறுத்தம் முடிந்து, நேற்று அனைத்து ஊழியர்களும் பணிக்கு திரும்பினர்; அலுவலகங்கள் முழுவீச்சில் செயல்பட்டன. கலெக்டர் அலுவலகங்களில் நடந்த மக்கள் குறை கேட்பு முகாம்களில், அதிக அளவில் மக்கள் பங்கேற்றனர்.

சட்டசபையில், முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், எங்களது கோரிக்கைகளை ஏற்கும் வகையிலான அறிவிப்பு எதுவும் இல்லை. உயர் அதிகாரிகள், எங்களை சந்திக்க மறுக்கின்றனர். எனவே, போராட்டத்தை தீவிரப்படுத்துகிறோம். ஆர். ராஜேந்திரன், செயலர் - வணிக வரி சங்க கூட்டமைப்பு