இந்த நாளில் அன்று - (29.02.1996) - இடைக்கால பட்ஜெட்: புது வரிகள் இல்லை; உணவு, ரசாயன உரம், பாதுகாப்புக்கு கூடுதல் ஒதுக்கீடு

1996-97ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் மன்மோகன் சிங் மக்களவையில் தாக்கல் செய்தார். பட்ஜெட் பற்றாக்குறை 5,000 கோடியாகவும், வருவாய் கணக்கில் பற்றாக்குறை 62 ஆயிரத்து 404 கோடியாகவும் இருக்கிறது.

நிதியாண்டின் முதல் 4 மாதங்களுக்கான செலவுகளுக்கு அனுமதி கோரும் முன்பண மானிய கோரிக்கை என்பதால் புதிய வரி விதிப்பு எதுவும் இல்லை.
மக்களவைக்கு அடுத்து பொதுத் தேர்தல் நடைபெறப் போவதால் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே பட்ஜெட்டில் வரி உத்தேசங்களும், பெட்ரோல், நிலக்கரி ஆகியவற்றின் விலை உயர்வுகளும் இடம்பெறவில்லை.
அதே போல வரிச்சலுகைகள், புதிய திட்டங்கள் ஆகியவையும் அறிவிக்கப்படவில்லை. கடந்த 5 ஆண்டுக்கால அரசின் சாதனைகள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.
மேலும், மக்களவை மற்றும் மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தல்களுக்காக இந்த இடைக்கால பட்ஜெட்டில் ரூ.400 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது