ரயில்வே பட்ஜெட்: தமிழகத்துக்கு ரூ. 22 கோடி மட்டுமே அதிகரிப்பு!

மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ரூ. 2064 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2015-16 ஆண்டில் ரூ. 2042 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது ரூ. 22 கோடி மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது.

வரும் நிதியாண்டில் திண்டுக்கல்- சபரிமலை, மொரப்பூர்- தர்மபுரி இடையே புதிய பாதை அமைப்பது ஆய்வு செய்யப்படும்.
திண்டுக்கல்-சபரிமலை இடையே 201 கிமீ தூரத்தில் அமையவிருக்கும் புதிய பாதை ஆய்வுப் பணிக்காக ரூ. 30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல மொரப்பூர்- தர்மபுரி இடையே 36 கிமீ தூரத்தில் அமையவிருக்கும் புதிய பாதை ஆய்வுப் பணிக்காக ரூ. 134 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், வரும் நிதியாண்டில் தமிழகத்தில் 97 புதிய ரயில்வே மேம்பாலங்கள் கட்டுவதற்கும் பட்ஜெட்டில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி 13 புதிய ரயில்வே மேம்பாலங்களும், 84 கீழ் பாலங்களும் கட்டப்படும்.
தென்மேற்கு ரயில்வே கீழ் வரும் பெங்களூரு ஒமலூர் இடையேயான 196 கிமீ தூர ரயில்வே பாதை மின்மயமாக்கப்படும். இதற்காக ரூ. 152.83 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல தெற்கு ரயில்வே கீழ் வரும் தஞ்சாவூர்-விழுப்புரம் இடையேயான 228 கி.மீ தூர ரயில்வே பாதை ரூ. 250 கோடியில் மின்மயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.