2016-17ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தார் ஜெட்லி! வருமான வரி விலக்கில் மாற்றமில்லை

டெல்லி: மத்திய அரசின் பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறு எந்த அறிவிப்பையும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வெளியிடவில்லை. அதேநேரம், வீட்டு 

வாடகைக்கான வரி விலக்கு மதிப்பை ஜெட்லி உயர்த்தியுள்ளார். இது மாத சம்பளக்காரர்களுக்கு ஓரளவுக்கு உதவும். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 23ம் தேதி தொடங்கியது. 25ம் தேதி ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று 2016-17-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் மதியம் 11 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது.

நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 3வது பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். கிராமப்புற வளர்ச்சி, விவசாய வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் பல அறிவிப்புகல் அதில் இடம் பெற்றன. தற்போது தனிநபருக்கான வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.2.5 லட்சமாக உள்ளது. விலைவாசி உயர்ந்து செலவுகள் அதிகரித்து இருப்பதால் இந்த வரிவிலக்கு உச்சவரம்பை அதிகரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மாதச்சம்பளம் பெறுவோர் மத்தியில் உள்ளது. எனவே இதுபற்றிய அறிவிப்பு பட்ஜெட்டில் இடம் பெறலாம் என்ற எதிர்பார்ப்பு பெரும்பான்மை மக்களுக்கு இருந்தது. ஆனால் அதுபோன்ற அறிவிப்பை ஜெட்லி வெளியிடவில்லை. அதேநேரம், வீட்டு வாடகை என்ற வகையில் இதுவரை 24 ஆயிரத்திற்கு மட்டுமே வருமான வரி விலக்கு தரப்பட்டது. அது இனி ரூ.60 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று ஜெட்லி அறிவிப்பு வெளியிட்டார்.