12 மையங்களில் பாதுகாக்கப்படும் பிளஸ் 2 தேர்வு வினாத்தாள்கள்

மதுரையில் பிளஸ் 2 தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் பாதுகாக்கப்படும் 12 மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

        தமிழகத்தில் மார்ச் 4ஆம் தேதி முதல் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன. பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வுகள் கடந்த 18ஆம் தேதி நிறைவடைந்து அதற்கான மதிப்பெண்களும் திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை 37 ஆயிரம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். அவர்களுக்கான பிரதான விடைத்தாள்கள் ஏற்கெனவே வந்து தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வு வினாத்தாள்கள் லாரி மூலம் சென்னையிலிருந்து மதுரைக்கு திங்கள்கிழமை இரவு வந்து சேர்ந்தன. காமராஜர் சாலையில் உள்ள நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வினாத்தாள்கள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. வினாத்தாள்கள் மதுரை மாவட்டத்தில் 12 இடங்களில் பாதுகாக்கப்படவுள்ளதாகவும், அந்த மையங்களுக்கு 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்றும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.