மாணவர்கள் குழப்பமோ குழப்பம் 10ம் வகுப்பு பொது தேர்வில் தமிழா, பிற மொழியா?

தமிழகத்தில், 2006 முதல், பள்ளிகளில், அனைத்து மாணவர்களுக்கும், தமிழ் கட்டாய பாடமாக்கப்பட்டது. இதன் படி, முதல் ஆண்டில், 1ம் வகுப்பு, அடுத்த ஆண்டில், 2ம் வகுப்பு என, தற்போது, 10ம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாகியுள்ளது.
 
இந்நிலையில், '2006ல் தமிழ் பாடம் கற்க துவங்கிய பிற மொழி மாணவர்கள், இந்த ஆண்டில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத வேண்டும்' என, கல்வி ஆண்டின் துவக்கத்தில், தேர்வுத்துறையும், பள்ளிக்கல்வித் துறையும் உத்தரவிட்டன.ஆனால், பொதுத் தேர்வில் மாணவர்கள் தமிழ் பாடம் எழுத, தமிழக மொழி சிறுபான்மையினர் பேரவை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கலானது.இதை தொடர்ந்து, பிற மொழி மாணவர்கள், 7,000 பேருக்கு பள்ளிக்கல்வித் துறை கடிதம் அனுப்பியது. அதில், 'தமிழை கட்டாய பாடமாக எழுதி, உரிய மதிப்பெண் பெற்றால் தான் தேர்ச்சி அறிவிக்கப்படும். தங்கள் தாய் மொழியான, பிற மொழியை, விருப்ப பாடமாக எழுதலாம்' என, அறிவித்தது.

இதற்கும் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், 'தேர்வில் தமிழ் கட்டாயம்' என்ற உத்தரவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.ஆனால், இதுகுறித்து பள்ளி களுக்கு, தேர்வுத்துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறையில் இருந்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்போ, உத்தரவோ பிறப்பிக்கவில்லை.அதனால், தமிழ் தேர்வா, பிறமொழி தேர்வா அல்லது, இரண்டையும் எழுத வேண்டுமா என மாணவர்களும், மொழி ஆசிரியர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.

செய்முறை தேர்வு: தேதி மாற்றம்:


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறை தேர்வு, பிப்., 18க்கு பதில், பிப்., 22 முதல் நடத்தப்பட உள்ளது.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, பிப்., 18 முதல் செய்முறை தேர்வு நடத்த, பள்ளிகள் அறிவுறுத்தப்பட்டிருந்தன. ஆனால், தேர்வு துறையில், மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யும் தொழில் நுட்பத்தில் பிரச்னை ஏற்பட்டது. அதை சரி செய்ய, சில நாட்கள் தாமதமாகின. அதனால், செய்முறை தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.