மாணவர்களுக்கு நீதிபோதனை வகுப்பு :ராமகோபாலன் வலியுறுத்தல்

மதுரை:''மாணவர்கள் பண்பும், அன்பும்,தன்னம்பிக்கை உள்ளவர்களாக வளர, பள்ளிகளில் நீதி போதனை வகுப்பு நடத்த வேண்டும்,'' என இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம

கோபாலன் தெரிவித்தார்.அவர் தெரிவித்துள்ளதாவது:நீதிபோதனை வகுப்பு களை, வரும் கல்வி ஆண்டில் துவக்க வேண்டும். பள்ளி, கல்லுாரிகளில் நல்லொழுக்கம் குறைந்து வருவதும், பலவித குற்றங்கள் மலிந்து வருவதும் சமூக அக்கறை உள்ளவர்களை கவலை கொள்ள செய்கிறது.
'ஜாக்டோ' எனும் ஆசிரியர் கூட்டமைப்பு, பள்ளிகளில் நீதிபோதனை வகுப்பு நடத்த வலியுறுத்தியுள்ளது வரவேற்கத்தக்கது. சில பள்ளிகளில் பண்பு, தன்னம்பிக்கை வளர்க்க எந்த ஏற்பாடும் இல்லை. இதனால் மாணவர்கள் தவறான பாதையில் செல்கின்றனர். இதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் கணினி, அலைபேசி பயன்பாடு முதல் இடத்தில் உள்ளது. திரைப்படங்களும் தவறான பாதைக்கு அழைத்து செல்கின்றன.
இத்தனை சோதனைகளுக்கு பிறகும், ஒரு மாணவன் தன்னார்வத்தால் நல்லவனாக வளர முடிந்தால் அதுவே சாதனைதான். மாணவர்களிடம் நல்ல சிந்தனை உருவாக எந்த முயற்சியும் எடுக்காத அரசு, இலவச பொருட்களை கொடுத்து வாக்கு வங்கி அரசியல் நடத்துகிறது.
ஆசிரியர்களே குடிக்கிறார்கள், பாலியல் தொல்லை கொடுக்கிறார்கள். 'காப்பி' அடிக்க வைத்து 'பாஸ்' செய்ய வைக்கும் பள்ளி நிர்வாகம், அதற்கு துணை போகும் அதிகாரிகள், மதிப்பெண் பெறாவிட்டாலும் தேர்ச்சி விகிதத்தை கூட்டிக்காட்ட வேண்டிய கட்டாயத்தால் 'பாஸ்' போடும் அதி
காரிகள், இதையெல்லாம் சாதனையாக காட்டும் அரசியல்வாதிகள் என பண்பாட்டு சீர்கேடு கொடி கட்டிப் பறக்கிறது.பாடத்திலும் பண்பிலும் தேர்ச்சி பெற் றால்தான் வாழ்வில் நல்ல நிலையை அடைய முடியும் என்பதை பதிய வைக்கும் வகையில், நீதிபோதனை வகுப்புகள் நடத்த வேண்டும்.
இதற்கு 'சேவபாரதி' உள்ளிட்ட சமூக அமைப்புகளின் உதவியை கல்வித்துறை நாடலாம். இதன் மூலம் நல்ல பண்பாடுள்ள வருங்கால சமூகத்தை, தன்னம்பிக்கை உள்ள தலைமுறையை உருவாக்க முடியும், என்றார்.