ரயில் முன்பதிவில் மாற்றம்

ரயில் டிக்கெட் முன்பதிவிற்கு விண்ணப்பிக்கும் போது, இஷ்டம் போல் பெயரை குறிப்பிடுவதை தடுக்க, ரயில்வே வாரியம் முடிவு
செய்துள்ளது.ரயில்களில் பயணிக்க, தினமும் சராசரியாக, 25 லட்சம் பேர் வரை முன்பதிவு செய்கின்றனர். வடக்கு மற்றும் கிழக்கு ரயில்வே மண்டலங்களில், முன்பதிவு செய்பவர்களில் பெரும்பாலானோர், தங்களது பெயரை சுருக்கமாகவும், இஷ்டம் போல் எழுதுவதையும், வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.

உதாரணத்திற்கு, வி.கே.எம்., என விண்ணப்பத்தில் பெயரை குறிப்பிட்டு முன்பதிவு செய்வர். அடையாள அட்டையை பரிசோதிக்கும் போது, வினோத் குமார் மல்கோத்ரா என இருக்கும்.
முன்பதிவின் போது குறைந்தபட்சம் மூன்று எழுத்து இருந்தால் போதும் என்பதால், இந்த பெயரை கணினியும் ஏற்றுக் கொள்ளும்.இதன்மூலம், முதல் மூன்று எழுத்துடன் ஒத்துப்போக கூடிய பெயர் உள்ள எவரும் பயணிக்க முடியும் என்ற நிலை இருந்தது. மேலும், முன்பதிவு துவங்கியவுடன் டிக்கெட்டை விரைவாக உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலும், சிலர் இந்த முறையை சாதகமாக பயன்படுத்தினர். இனி இந்த முறையை கையாள முடியாது.

இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரயில் முன்பதிவில் இஷ்டம் போல் பெயர் எழுதுவதை தடுக்க, தேவையான தொழில்நுட்ப மாற்றங்களை செய்ய, 'சென்டர் பார் ரயில்வே இன்பர்மேஷன் சிஸ்டம்' பிரிவு, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இனி, பெயரை சுருக்கமாகவோ அல்லது, பெயரின் ஒரு பகுதியை மட்டும் குறிப்பிட்டாலோ, முன்பதிவின் போதே டிக்கெட் உறுதி செய்யாமல் நிறுத்தப்படும். மேலும், பயணத்தில் கண்டறியப்பட்டால், அபராதம் விதிக்கப்படும், விரைவில், புதிய நடைமுறை செயல்பாட்டுக்கு வரும்.இவ்வாறு அவர் கூறினார்.