உண்மை தன்மை கண்டறிவதில் அலட்சியம்

சேலம்: ஆசிரியர்களின் சான்றிதழ்களை சரிபார்ப்பதில், தலைமை ஆசிரியர்கள் மற்றும் தேர்வுத்துறையின் அலட்சியப் போக்கின் காரணமாகவே, போலி ஆசிரியர்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சமீபத்தில், தர்மபுரி மாவட்டத்தில் போலி சான்றிதழ் தயாரித்து, அரசு பணியில் சேர்த்துவிடும் இடைத்தரகர் கும்பல் போலீசில் சிக்கியது. இதில், ஏராளமான ஆசிரியர்கள் போலி சான்றிதழ் தயாரித்து பணியில் சேர்ந்துள்ள விவரம் வெளியானது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களின் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்க உத்தரவிடப்பட்டது. 

இதில், கலந்து கொள்ளாமல், பல ஆசிரியர்கள் டிமிக்கி கொடுத்தும், தலைமறைவாகவும் உள்ளனர். பணியில் சேரும் போது, போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக, பல்வேறு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. விதிமுறைகளை கடைபிடிக்காமல், தேர்வுத்துறையும், தலைமை ஆசிரியர்களும் அலட்சியப்போக்குடன் நடந்து கொண்டதாலேயே, போலி ஆசிரியர்கள் பணிக்கு வந்துள்ள சூழல் ஏற்பட்டுள்ளது என, ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: 
பணியில் சேரும் போது, அந்த ஆசிரியரின் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை அறிய வேண்டியது அவசியம். இதற்காக, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 சான்றிதழ் விவரங்களை அரசு தேர்வுத்துறையிடம் இருந்து உண்மை தன்மையையும், பட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களில் இருந்து உண்மை தன்மையையும் பெற வேண்டும். உண்மை தன்மைக்காக தேர்வுத்துறைக்கு அனுப்பப்படும் சான்றிதழ்கள் கிடப்பில் போடப்படுகின்றன. கடந்த ஒன்றரை ஆண்டுக்கு மேலாகியும், இதுவரை ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் உண்மை தன்மை குறித்த தகவல்களை வழங்கவில்லை. 

ஆட்கள் பற்றாக்குறையை காரணம் காட்டி, தேர்வுத்துறை இப்பணியினை ஒத்தி வைத்துவிடுகிறது. அதே போல், பள்ளி தலைமை ஆசிரியர்கள், பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் பட்டச்சான்று குறித்த உண்மை தன்மையை, சம்பந்தப்பட்ட பல்கலையில் ரகசியமாக கேட்டு வாங்கி சரிபார்க்க வேண்டும். ஆனால், இன்று எந்த தலைமை ஆசிரியரும் உண்மை தன்மைக்கு விண்ணப்பிப்பதில்லை. 

பதிலுக்கு சம்பந்தப்பட்ட ஆசிரியரையே, உண்மைதன்மை சான்றிதழ் சமர்ப்பிக்க கூறிவிடுகின்றனர். இதனால், போலி சான்று தயாரித்து தரும் ஆசிரியர், உண்மை தன்மை சான்றிதழையும் போலியாக தயாரித்து கொடுத்து விடுகின்றனர். இன்று போலி ஆசிரியர்களில் பெரும்பாலானோர், தலைமை ஆசிரியரின் கவனக்குறைவால் பணியில் சேர்ந்தவர்களே. 

முழுமையாக அனைத்து ஆசிரியர்களின் சான்றிதழ்களையும் உண்மைதன்மைக்கு உட்படுத்தினால், நூற்றுக்கணக்கான போலி ஆசிரியர்களை கையும் களவுமாக பிடிக்க முடியும். அதற்கு நடவடிக்கை எடுப்பதுடன், தலைமை ஆசிரியர்களின் அலட்சியபோக்கினை தவிர்க்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
My Blogger TricksAll Blogger TricksLatest Tips and Tricks