இன்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை 93 ஆயிரம்  குழந்தைகளுக்கு முதல் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது.

நல்வழித்துறை சார்பில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஜனவரி 17, பிப்ரவரி 21 தேதிகளில் போலியோ சொட்டு மருந்து போடப்படுகிறது. இதற்காக யூனியன் பிரதேசம் முழுவதும் 2000 ஊழியர்கள் இப்பணியில் ஈடுபடுவர்.
புதுச்சேரியில் 310 மையங்கள், காரைக்காலில் 70, மாஹேயில் 16, ஏனாமில் 18 என மொத்தம் 441 சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 17 முகாம்கள் எல்லைப்புறங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
புதுவையில் 35-க்கு மேற்பட்ட அதிக பாதிப்பு நிறைந்த பகுதிகள் அடையாளம் காணப்பட்டு 361 குழந்தைகளுக்கு தவறாமல் மருந்து அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பஸ் நிலையம், ரயில் நிலையம், கடற்கரை சாலை, மணக்குள விநாயகர் கோயில், பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, போத்தீஸ், சுண்ணாம்பாறு படகு குழாம், ஊசுட்டேரி படகு இல்லம், போகோ லேண்ட் பூங்கா, குறும்பாபேட், காலாப்பட்டு, மதகடிப்பட்டு, கோரிமேடு, கன்னியக்கோயில், திருக்கனூர் உள்ளிட்ட எல்லைப்புற பகுதிகளிலும் மையங்கள் அமைக்கப்படுகின்றன.
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை போலியோ சொட்டு மருந்து போடப்படும். விடுபட்ட குழந்தைகளுக்கு திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் மருந்து போடப்படும். மேலும் ஜிப்மர், ராஜிóவ்காந்தி குழந்தைகள் மருத்துவமனை, இந்திரா காந்தி அரசு மருத்துவக்கல்லூரி, நல்வழித்துறை அலுவலகம், கட்டுப்பாட்டு அறைகள் ஞாயிற்றுக்கிழமை செயல்படும்.
எனவே பெற்றோர் தங்கள் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தவறாமல் போலியோ சொட்டு மருந்து போட வேண்டும் என நல்வழித்துறை இயக்குநர் டாக்டர் கேவி.ராமன் தெரிவித்துள்ளார்.