பி.இ. சேர்க்கை விண்ணப்பம் விநியோகம் எப்போது? அண்ணா பல்கலை.யில் ஆலோசனை

பி.இ. மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் எப்போது என்பது குறித்து அண்ணா பல்கலை.யில் ஆலோசனை நடத்தப்பட்டது.

 2016-17-ஆம் கல்வியாண்டில் பொறியியல் சேர்க்கை நடைமுறைகள் குறித்த முதல்கட்ட ஆலோசனை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணைவேந்தர் ராஜாராம் தலைமை வகித்தார்.
 வழக்கமாக விண்ணப்ப விநியோகம் மே முதல் வராத்தில் தொடங்கும். விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் என்பதோடு, மையங்கள் மூலமும் விநியோகிக்கப்படும்.
 இந்த நிலையில், சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் இறுதி வாரம் அல்லது மே முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. எனவே, மையங்கள் மூலமான பொறியியல் சேர்க்கை விண்ணப்ப விநியோகத்தைத் தள்ளிப்போடுவதா என்பது ஆலோசிக்கப்பட்டதாகவும் பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
 இதுகுறித்து பதிவாளர் கணேசன் கூறியது:
 கடந்த 4 ஆண்டுகளில் கலந்தாய்வு எப்படி நடத்தப்பட்டது என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. வேறு எந்த முக்கிய முடிவுகளும் எடுக்கப்படவில்லை.
 அடுத்தடுத்து நடைபெற உள்ள கலந்தாய்வு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில்தான், எவ்வளவு விண்ணப்பங்களை அச்சடிப்பது, கட்டணம், விநியோகம் தாடங்குவது எப்போது என்பன குறித்த இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என்றார்.