எதிர்கால தேவைக்கு ஏற்ற படிப்புகள்: ஜெயபிரகாஷ் காந்தி ஆலோசனை

மதுரை,:''எதிர்கால தேவைக்கு ஏற்ப வேலைவாய்ப்பு அளிக்கும் படிப்புகளை தேர்வு செய்ய வேண்டும்,'' என கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ்காந்தி தெரிவித்தார்.

மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லுாரி யில் மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் ௯, ௧௦ம் வகுப்பு மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்காக 'எதிர்காலத்தில் என்ன படிக்க வேண்டும்' என்ற தலைப்பில் கல்வி ஆலோசனை நிகழ்ச்சி நடந்தது.கல்விக் குழும தலைவர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் கணேஷ்நடராஜ் வரவேற்றார். சீனியர் முதல்வர் கோதண்ட ராமன் தலைமை வகித்தார்.
ஜெயபிரகாஷ்காந்தி பேசியதாவது:பள்ளியில் படிக்கும்போதே உயர்கல்வியை தேர்வு செய்யும் திடமான முடிவு வேண்டும். எதிர்கால தேவைக்கு ஏற்ற வேலைவாய்ப்பு அளிக்கும் படிப்புகளை தேர்வு செய்ய வேண்டும். அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் மருத்துவம், தகவல் தொழில்நுட்பம் உட்பட எதிர்கால வேலைவாய்ப்பு அளிக்கும் பொறியியல் படிப்புக்களை தேர்வு செய்யலாம்.
குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்கள் பிஸியோதெரபி, இயற்கை மருத்துவம், சித்தா, ஓமியோபதி உள்ளிட்ட படிப்புகளை தேர்வு செய்யலாம்.
சட்டகல்வியில் மத்திய அரசின் 'நேஷனல் லா ஸ்கூலில்' தமிழக மாணவர்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு உண்டு. இப்படிப்புடன் 'அசோஷியேட் கம்பெனி செகரட்டரிஷிப்' படித்தால் மத்திய அரசு வேலை கிடைக்கும். தமிழகத்தை விட ஆந்திராவில் ஐ.ஐ.டி., படிப்பு குறித்து அதிக விழிப்புணர்வு உள்ளது. அங்குதான் அதிகம் தேர்ச்சி பெறுகின்றனர். ஐ.ஐ.டி., தொழில்கல்வி குறித்தும் விழிப்புணர்வு வேண்டும் என்றார்.
திருப்புவனம் வேலம்மாள் மெட்ரிக் பள்ளி முதல்வர் விஜயராகவன் நன்றி கூறினார்.