இன்ஜி., மாணவர் சேர்க்கை பிப்ரவரியில் ஆலோசனை

தமிழகத்தில், அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, 535க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, சென்னை, அண்ணா பல்கலையில், மாணவர் சேர்க்கை நடத்தப்படும். மொத்தம், 2.15 லட்சம் பி.இ., - பி.டெக்., படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்படுவர்.

அதற்காக, உயர் கல்வித் துறையின் சார்பில், ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில், அண்ணா பல்கலை துணைவேந்தர் ராஜாராம், உயர் கல்வி செயலர் அபூர்வா, தொழில்நுட்ப கல்வித் துறை கமிஷனர் மதுமதி மற்றும் தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கை பிரிவு செயலர், பேராசிரியர் இந்துமதி ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

இந்த குழுவின் முதல் ஆலோசனை கூட்டம், பிப்ரவரி முதல் வாரத்தில் நடக்கவுள்ளது. இதில், வரும் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கை நடத்தும் முறை, காலியிடங்களின் எண்ணிக்கை, கல்லுாரிகளின் இணைப்பு நிலவரம், விண்ணப்பம் வழங்கும் தேதி போன்றவை குறித்து, முடிவு செய்யப்பட உள்ளதாக, உயர் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.