மக்கள்தொகை தகவல் சரிபார்ப்புப் பணி தொடக்கம்: பிப்ரவரி 5 வரை நடைபெறும்

தமிழகம் முழுவதும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கான தகவல் சேகரிப்புப் பணி திங்கள்கிழமை தொடங்கியது. பிப்ரவரி 5-ஆம் தேதி
வரை நடைபெறுகிறது. இது குறித்து, மக்கள் கணக்கெடுப்புத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தகவல் சேகரிப்புப் பணிக்காக நியமனம் செய்யப்பட்ட அரசு அலுவலர் (கணக்கெடுப்பாளர்) ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று, குடும்பத்தினர் பற்றிய தகவலை சேகரிப்பார்.
விவரங்களை உறுதி செய்து கொள்ள...: கணக்கெடுப்பாளர் அச்சிடப்பட்ட மக்கள்தொகை பதிவேடு புத்தகத்தையும் தன்னுடன் எடுத்து வருவார். புத்தகத்தில், குடும்ப நபர்களின் பெயர், பாலினம், பிறந்த தேதி, தந்தையின் பெயர், தாய் பெயர், பிறந்த இடம், தற்போதைய முகவரி உள்ளிட்ட விவரங்கள் அடங்கியிருக்கும். மேலும், வீட்டிலுள்ளவர்களுக்கு ஏற்கெனவே ஆதார் எண் வழங்கப்பட்டிருந்தால், அதுபற்றிய தகவலும் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும்.
பொதுமக்கள் தங்களின் விவரங்களை சரிபார்ப்பதோடு, முழுமையான தகவல்களையும் அளிக்க வேண்டும். மேலும், செல்லிடப்பேசி எண், குடும்ப அட்டை எண் உள்ளிட்ட விவரங்களையும் கட்டாயம் அளிக்க வேண்டும்.
மக்கள் தொகை பதிவேடு புத்தகத்தில் அச்சிடப்பட்ட விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா, இறந்த நபர்கள் பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளதா, புதிய உறுப்பினர் (பிறந்த குழந்தை) விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளனவா போன்ற விவரங்களையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

ஒத்துழைக்க வேண்டுகோள்: புதிதாக குடியேறியவர்களும் விவரங்களையும் கணக்கெடுப்பாளரிடம் தவறாமல் தெரிவித்து, தங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். பொதுமக்கள் குடும்ப நபர்களின் அனைத்து ஆவணங்களையும் தயாராக வைத்திருந்து, சரிபார்த்து பதிவு செய்ய ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.