குப்பையை எரித்து உரமாக்கும் கருவி கிராம பள்ளி மாணவன் வடிவமைப்பு

ஸ்ரீவில்லிபுத்துார், :நாட்டில் அதிகரித்து வரும் மாசுக்களை அகற்றி, துாய்மை இந்தியா உருவாகிட உலர்ந்த குப்பையை எரித்து உரமாக்கும் கருவியை ஸ்ரீவில்லிபுத்துார் கிராம அரசு பள்ளி மாணவன் வடிவமைத்துள்ளார்.


ஸ்ரீவில்லிபுத்துார் லட்சுமியாபுரம் புதுாரை சேர்ந்தவர் சிவசாமி,48. மில் தொழிலாளி. மனைவி சுந்தரம்மாள்,42. இத்தம்பதியின் மகன் விஷ்வா,12, உள்ளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கிறார்.மாணவர் விஷ்வா, மக்கும் மற்றும் மக்காத குப்பையை உலர்த்தி, அதை எரித்து உரமாக்கும் வகையில் கருவியை வடிவமைத்துள்ளார். இதற்கு 'ஆட்டோமேடிக் வேஸ்ட் கன்வெர்டர்' என பெயரிட்டுள்ளார். மின்சாரம், சோலார் எனர்ஜி மூலமும் செயல்படும் வகையில் வடிவமைக்கபட்டுள்ளது. இதை,இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப கழகத்தின் சார்பில், மாவட்ட , மாநில அளவிலும் நடந்த கண்காட்சியில் சமர்பித்து சிறந்த கண்டுபிடிப்பிற்கான 'இன்ஸ்பெயர்' விருதை பெற்றுள்ளார்.


42பேரில் ஒருவர்:

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பெயரில் மாநில அரசின் சார்பில் வழங்கப்படும் இளம்விஞ்ஞானி விருதையும் பெற்றுள்ளார்.மேலும், டில்லியில் நடக்கும் தேசிய அளவிலான அறிவியல் படைப்புகள் தொடர்பான கண்காட்சிக்கு, தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 42பேரில் மாணவன் விஷ்வாவும் ஒருவர்.

துாய்மை இந்தியா:

இந்த புதிய கருவி மூலம் மக்கும் மற்றும் மக்காத குப்பையை சேகரித்து எரியூட்டும்போது, அவை விவசாயத்திற்கு பயன்படும் உரமாக கிடைக்கிறது. இதில் மக்காத குப்பையின் கழிவுகளை தனியாக பிரித்து எடுக்கலாம். இதை மிகபெரிய அளவில் வடிவமைத்தால் ஒவ்வொரு நகரிலும் சேகரமாகும் குப்பையை அழிக்கலாம். இதன் மூலம் சுற்றுசூழல் மாசுபடாத, துாய்மை இந்தியா உருவாக வாய்ப்புள்ளது என்கிறார் மாணவன் விஷ்வா.

அவர் கூறுகையில்,“தந்தையுடன் நகருக்குள் செல்லும்போது பல இடங்களில் குப்பை கிடப்பதை பார்த்தேன். துாய்மையான நகரங்கள் உருவாகிடும் வகையில், மாசுக்களை அழிக்க உதவும் வகையில் இந்த கருவியை உருவாக்கி உள்ளேன்,”என்றார்.

மழையால் இழந்த வாய்ப்பு:

டிசம்பர் 6 மற்றும் 7ல் டெல்லியில் நடந்த தேசிய அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க மாணவர் விஷ்வா தமிழகத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். சென்னையிலுள்ள தமிழ்நாடு தொழில் நுட்ப மையத்தில் இருந்து டில்லிக்கு சென்று திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதற்காக ஸ்ரீவில்லிபுத்துரிலிருந்து சென்னைக்கு ரயில் டிக்கெட் எடுத்திருந்த நிலையில், மழையால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், இவர் சென்னை செல்ல இயலவில்லை. தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் மாற்று ஏற்பாடு செய்யாததால் டில்லியில் நடந்த தேசியஅறிவியல் கண்காட்சியில் படைப்புகளை சமர்பிக்கும் நல்ல வாய்ப்பை மாணவர் இழந்துள்ளார்.