வடகிழக்கு மழை குறைகிறது: மக்கள் நிம்மதி

சென்னை:'தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் தாக்கம் குறைந்து வருகிறது' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், மக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

வட கிழக்கு பருவ மழை, 10 ஆண்டுகளுக்கு பின், அதன் கடுமையை, நடப்பு ஆண்டு காட்டிவிட்டது. அக்டோபரில் துவங்கி டிசம்பர் வரை, மூன்று மாதங்களுக்கு பெய்யக் கூடிய பருவ மழை, இன்னும், 20 நாட்களில் முடிவுக்கு வர உள்ளது.இந்நிலையில், 'மழையின் வேகம் குறைகிறது' என, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வட கிழக்கு பருவ மழை, 2005க்குப் பின், பற்றாக்குறை மற்றும் சராசரியாகவே பெய்துள்ளது. குறிப்பாக, 2012ல் - 16, 2013ல் - 33, 2014ல் - 2 சதவீத மழை, சராசரியை விட குறைவாகவே பெய்துள்ளது. ஆனால், நடப்பாண்டில் வட கிழக்கு பருவ மழை துவங்கிய பின், வங்கக் கடலில் எட்டு முறை குறைந்த காற்றழுத்த தாழ்வு ஏற்பட்டுள்ளது; இதனால், தமிழகம் முழுவதும் பரவலாக கன மழை பெய்துள்ளது.

டிச., 1ல், சென்னை மற்றும் சுற்றுப்பகுதியில் மிக கன மழை பெய்தது. தாம்பரத்தில் அதிகபட்ச மாக, 24 மணி நேரத்தில், 49 செ.மீ., மழை பதிவானது. அதன்பின், மழையின் வேகம் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.இதுகுறித்து, வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:வங்கக் கடலின் தென் மேற்கு பகுதியில், குமரிக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு வலுவிழந்து விட்டதால், தமிழகத்தில் இனி கன மழைக்கு வாய்ப்பு இல்லை.

அடுத்த மூன்று நாட்களுக்கு, கன்னியாகுமரி, துாத்துக்குடி மாவட்டங்களில் லேசான மழை பெய்யலாம். சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு மிகக் குறைவு.
டிச., 14 வரையிலான வானிலை முன்னறிவிப்பின் படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யலாம்.

சென்னையில், அடுத்த, 48 மணி நேரத்துக்கு, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்; ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.மழை அளவு: நேற்று காலை, 8:30 மணி வரை, தமிழகத்தில் அதிகபட்சமாக, தேனி மாவட்டம் உத்தமபாளையம் - 4, கடலுார் மாவட்டம் பண்ருட்டி, விருத்தாசலம், தர்மபுரி மாவட்டம் அரூர், விழுப்புரம் மாவட்டம் உளுந்துார்பேட்டை - 3 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.


மழை குறைய காரணம் என்ன:

சென்னை வானிலை மைய முன்னாள் இயக்குனர் ஒய்.இ.ஏ.ராஜ் கூறியதாவது:பூமத்திய ரேகைக்கு அருகில் இருக்கும் காற்றழுத்த தாழ்வு, தற்போது சற்று விலகிச் சென்றுவிட்டது; இதனால், தமிழகத்தில் மழை குறைந்துள்ளது. கடலின் வெப்பம் குறைந்து கொண்டே வருகிறது. கடலில், 10 - 15 மீட்டர் ஆழத்தில் இருக்கும் தண்ணீர் மேல் எழுந்து வரும். இந்த நீர் குளிர்ச்சியாக இருப்பதால், கடலின் வெப்பமும் தணிந்து வருகிறது.

எனவே, அடுத்த ஒரு வாரத்துக்கு கன மழைக்கான வாய்ப்பு குறைவு. வட கிழக்கு பருவ மழையின் அடுத்தகட்டத்தை, இப்போதைக்கு கணிக்க முடியாது. பல நேரங்களில், ஜனவரி முதல் வாரம் வரை கூட மழை பெய்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.