தகவல் பெறும் உரிமைச் சட்டம்: பதிலளிக்க முக்கிய வழிமுறைகள்; தமிழக அரசு விளக்கம்..

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், பதிலளிக்கப் பின்பற்ற வேண்டிய முக்கிய வழிமுறைகள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.  இந்தச் சட்டத்தின் கீழ் தகவல்களைப் பெறுவோருக்கு எந்தெந்த வழிமுறைகளில் பதிலளிக்க வேண்டும் என்று வரைமுறைப்படுத்த விவரங்கள் இல்லை. இந்த நிலையில், வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 

        இவற்றை விளக்கி தமிழக அரசின் பணியாளர்-நிர்வாகச் சீர்திருத்தத் துறையானது அரசின் அனைத்துத் துறைகளுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில், கூறப்பட்டுள்ளதாவது:  பதிலில் தகவல் பெறும் விண்ணப்பத்தின் எண், பெறப்பட்ட தேதி, தகவல் அதிகாரியின் பெயர், பதவி, அலுவலக தொலைபேசி எண், மின்னஞ்சல் ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும்.  விண்ணப்பதாரர் கோரிய தகவல்களைத் தெரிவிக்க இயலாது என்றால், அதற்குரிய காரணங்களை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.  

      மற்றொரு தகவல் அளிக்கும் அதிகாரிக்கு விண்ணப்பம் மாற்றப்பட்டிருந்தால், அதுகுறித்த விவரத்தை தெரிவிக்க வேண்டும். பதிலை முடிப்பதற்கு முன்பாக, தகவல் கோரி முதல் முறையாக விண்ணப்பித்திருந்தாரா, மேல்முறையீடா என்பதை தெரிவிக்க வேண்டும்.   


ஆவணங்களில் சான்றொப்பம்: ஏதேனும் ஆவணங்களை அளித்தால், இவை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படுகிறது எனத் தெரிவித்து அதில் தேதி, அவற்றை அளிக்கும் தகவல் அதிகாரியின் பெயருடன் அடங்கிய முத்திரை, பெயர் உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிடு சான்றொப்பம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது