முதலமைச்சர் உத்தரவை மீறி அரையாண்டு தேர்வை நடத்தினால் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை: பள்ளிக்கல்வி துறை

வரலாறு காணாத பருவ மழை காரணமாக தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் தூத்துக்குடி
மாவட்டங்களில் பொதுமக்களுக்கு பெருமளவு இழப்பு ஏற்பட்டது.இது தவிர பிற மாவட்டங்களில் இயல்பான அளவு மழை பெய்தாலும் கன மழை காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.


        குறிப்பாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஒரு மாதத்திற்கும் மேலாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு இருந்தன.இயற்கையின் சீற்றத்திற்கு ஆளான இம்மாவட்ட மக்கள் படிப்படியாக இயல்பு நிலைக்கு தற்போது திரும்பி வருகின்றனர்.இந்த நிலையில் கடந்த 7–ந்தேதி மற்றும் 9–ந்தேதி 12–ம் வகுப்பு மற்றும் 10–ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.கன மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டதால் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் அரையாண்டு தேர்வுகள் ஜனவரி முதல் வாரத்திற்கு தள்ளி வைத்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு இருந்தார்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.இந்த நிலையில் வெள்ளபாதிப்பு ஏற்பட்ட 4 மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. 33 நாட்களுக்கு பிறகு மாணவ – மாணவிகள்பள்ளிகளுக்கு சென்றனர்.பள்ளிகள் திறந்தாலும் அரையாண்டு தேர்வு பற்றி பள்ளி கல்வித்துறை இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.


வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மன அழுத்தம், மன உளைச்சலில் இருந்து விடுபட உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் பள்ளிகள் திறந்தவுடன் ஒரு சில தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வை நடத்த தொடங்கியுள்ளன.சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மாணவர்களின் மனநிலையை புரிந்து கொள்ளாமல் தேர்வை நடத்தி வருகின்றன.இதற்கு சில பள்ளிகளின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 


ஆனாலும் அவற்றை பொருட்படுத்தாமல் அவரவர் இஷ்டத்துக்கு அரையாண்டு தேர்வுகளை நடத்தி வருகின்றனர்.இதுபற்றி பள்ளி கல்வித் துறைக்கும் புகார் சென்றுள்ளது. அரசின் உத்தரவிற்கு மாறாக செயல்படும் தனியார் பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் பள்ளிக்கல்வி துறை தயாராகி வருகிறது.இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பன் கூறியதாவது:–கன மழை வெள்ளத்தால் தமிழகம்முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வுகள் ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்து முதல்–அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.


அதன் அடிப்படையில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதை அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் கல்வி அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.ஒருமுறை மட்டுமல்ல 2–வது முறையாகவும் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது குறித்து தெளிவாகமுதல்-அமைச்சர் விளக்கம் அளித்தார்.

முதல்–அமைச்சரின் உத்தரவையும் மீறி தனியார் பள்ளிகள் அரையாண்டு தேர்வுகள் நடத்தினால் அந்த பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களின் நலன் கருதாமல் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை ஏற்க முடியாது.டிசம்பர் மாதம் எந்த தேர்வுகளையும் நடத்த கூடாது. வெள்ளத்தால் குழந்தைகள், பெற்றோர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதற்காகத்தான் அரசு தேர்வை தள்ளி வைத்துள்ளது.

அதற்குள்ளாக ஒரு சில தனியார் பள்ளிகள் தன்னிச்சையாக இது போன்ற முடிவுகளை எடுத்து மாணவர்களையும் பெற்றோர்களையும் கஷ்டப்படுத்துவது முறையற்ற செயல். எந்தெந்த பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படுகிறதோ அந்த பள்ளிகள் குறித்த விவரங்கள் கேட்டறிந்து உரிய விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.