மாணவர்கள் தாங்களாக முன்வந்து வெள்ள நிவாரண நிதி வழங்கினால் மட்டுமே பள்ளிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும், கட்டாயப்படுத்தாதீர் - தலைமையாசிரியர்களுக்கு எச்சரிக்கை

'வெள்ள நிவாரணத்திற்காக பணம் வசூலிக்க மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது,' என, தலைமையாசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் மாவட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் பொருள் உதவி, முதல்வர் பெயரில் வெள்ள நிவாரண நிதி அனுப்பி வருகின்றனர். 



இதனிடையே பல்வேறு மாவட்டங்களில் மாணவர்களை, மக்கள் மற்றும் கடைகளில் இருந்து வெள்ள நிவாரண நிதி வசூலித்து தர பள்ளி நிர்வாகங்கள் கட்டாயப்படுத்துவதாகவும், ஆனால் அதற்கான வழங்கப்பட்ட ரசீதில் பள்ளி பெயர் உள்ளிட்ட எந்த விபரமும் இல்லை எனவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வெள்ள நிவாரண நிதி வசூலிக்க மாணவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது என, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.



         அத்துறை உயர்அதிகாரி ஒருவர் கூறுகையில், “மாணவர்கள் தாங்களாக முன்வந்து வெள்ள நிவாரண நிதி வழங்கினால் மட்டுமே பள்ளிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். மாறாக அதிக தொகை தரவேண்டும் என்பதற்காக அவர்களை வீடுகளுக்குச்சென்று அந்நிதி வசூலிக்க கட்டாயப்படுத்தக்கூடாது. மீறும் பள்ளி தலைமையாசிரியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்,”என்றார்.