ரயில்களில் அரை டிக்கெட்டுக்கு தனி 'பெர்த்' இனி இல்லை


ரயில்களில் படுக்கை, இரண்டடுக்கு,மூன்றடுக்கு ஏசி மற்றும் முதல் வகுப்பு ஏசி பெட்டிகளில் ௫-11 வயது குழந்தைகளுக்கு அரை டிக்கெட் எடுத்தால் தற்போது தனி 'பெர்த்' வழங்கப்படுகிறது. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஏப்., 10 முதல் முழு டிக்கெட் எடுத்தால் மட்டுமே குழந்தைகளுக்கு தனி 'பெர்த்' வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து அறிவிக்கவுள்ளது.

குழந்தைகளுக்கு அரை டிக்கெட் எடுத்தால், பயணிகள் அவர்களது 'பெர்த்தை' பங்கீட்டு கொள்ளலாம் எனவும் அறிவிக்க திட்டமிட்டு உள்ளது. ரயில்வே நிர்வாகத்தின் இந்த முடிவு பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் கோட்ட செயலாளர் சங்கரநாராயணன், ''இது மறைமுக கட்டண உயர்வாகும். எனவே ரயில்வே நிர்வாகம் இந்த முடிவை திரும்ப பெற வேண்டும். அரை டிக்கெட் எடுத்தாலும் குழந்தைகளுக்கு தனி 'பெர்த்' வசதி தொடர வேண்டும்,'' என்றார்.