அரையாண்டு தேர்வு வேண்டாம் பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை - முதல்வர் தனிப்பிரிவில் மனு

'பள்ளிகளில், அரையாண்டு தேர்வு நடத்தாமல், ஆண்டு இறுதித்தேர்வு மட்டும் நடத்த வேண்டும்' என, தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இச்சங்கம் சார்பில், முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில், கோரிக்கை மனு அளித்த பின், சங்கத் தலைவர் அருமைநாதன் கூறியதாவது:

        மழை வெள்ளத்தால், தமிழகத்தில், பல மாவட்டங்கள், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அப்பகுதி மக்கள், பெரும் பொருளாதார சேதத்தை சந்தித்துள்ளனர். எனினும், தனியார் பள்ளிகள், 'கல்விக் கட்டணத்தை உடனடியாக கட்ட வேண்டும்' என, நிர்ப்பந்தம் செய்வதாக, பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து, தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.

      இழந்த பள்ளி நாட்களை சரி செய்வது குறித்து திட்டமிட, பெற்றோர், ஆசிரியர், மாணவர் அடங்கிய ஆலோசனை குழுவை அமைக்க வேண்டும். மழையால், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அரையாண்டு தேர்வை ரத்து செய்ய வேண்டும். பாடங்களை குறைத்து, ஆண்டு இறுதித் தேர்வு மட்டும் நடத்த வேண்டும்.

        மாணவர்கள், சென்னை மாநகர பேருந்தில் பயணம் செய்ய, நவ., 15 முதல், டிச., 15 வரை வாங்கிய பயண அட்டைகளை, விடுமுறை காரணமாக பயன்படுத்த இயலவில்லை. எனவே, அந்த அட்டைகளின் காலக்கெடுவை, ஜன., 15 வரை நீட்டிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.