16, 18-ந் தேதிகளில் நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளிவைப்பு

16, 18-ந் தேதிகளில் நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. சென்னை உள்பட 4 மாவட்ட மாணவர்கள் தேர்வை ஏப்ரல் மாதம் எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

தேர்வுகள் தள்ளிவைப்பு

தமிழ்நாட்டில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகள் அனைத்திற்கும் செமஸ்டர் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டன. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேர்வுகளில் இடைவிடாமல் தேர்வுகள் நடத்தப்பட இருந்தன. இதை அறிந்த மாணவர்கள் நேற்று அண்ணாபல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி அருகே போராட்டம் நடத்தினார்கள்.

போராட்டம் காரணமாக தொடர்ந்து இருந்த தேர்வுகளான 16-ந்தேதி என்ஜினீயரிங் கிராபிக்ஸ், 18-ந்தேதி டெக் ஆங்கிலம் ஆகிய தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது:-

அந்த தேர்வுகள் நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளன. இது தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளில் படிக்கும் அனைத்து முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் பொருந்தும்.

ஏப்ரல் மாதம் தேர்வு எழுதலாம்

அதுபோல சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் , கடலூர் ஆகிய 4 மாவட்டங்களிலும் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகள் மழை வெள்ளத்தில் பாடப்புத்தகங்களை இழந்திருக்கலாம. எனவே விருப்பம் உள்ள மாணவர்கள் மட்டும் முதல் செமஸ்டர் தேர்வை இப்போது எழுதலாம். விருப்பம் இல்லாதவர்கள் முதல் செமஸ்டர் தேர்வை ஏப்ரல் மாதம் எழுதலாம். அந்த பாடத்தேர்வுகள் அனைத்தும் அரியர்ஸ் ஆக கருதப்படாது. இதற்கு தேர்வு கட்டணமும் கிடையாது.

இவ்வாறு அண்ணாபல்கலைக் கழக பதிவாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.