உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, வெள்ளப் பாதிப்புக்கு ஆளான சென்னை,
காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 148 பொறியியல்
கல்லூரிகளில் அனைத்து பருவத் தேர்வுகளையும் அண்ணா பல்கலைக்கழகம்
ஒத்திவைத்துள்ளது. மேலும், தேர்வுகள் டிசம்பர் 28 முதல் தொடங்கி
நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.
தொடர் மழை, வெள்ள பாதிப்புகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கு
பதிலாக புதிதாக அறிவிக்கப்பட்ட தேர்வுகள் இடைவெளியின்றி தொடர்ச்சியாக
நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை
100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டு, போராட்டம்
நடத்தினர். அவர்களை சமரசம் செய்த பல்கலைக்கழகத்தினர், "தேர்வுகளை
விருப்பப்பட்டால் எழுதலாம். இல்லையெனில் ஏப்ரல்-மே மாதங்களில் எழுதலாம்.
அரியராக கருத மாட்டோம்' என தெரிவித்தனர்.
உயர்நீதிமன்றத்தில் முறையீடு: இதற்கிடையே "அப்துல் கலாம் விஷன் இந்தியா
அறக்கட்டளை'யைச் சேர்ந்த எஸ். குமார் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி
எஸ்.கே.கெளல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு முறையீடு செய்தார்.
அப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாணவர்கள் தேர்வுக்கு
தயாராவதில் சிக்கல்கள் உள்ளன. எனவே, டிசம்பர் 15 முதல் தொடங்க உள்ள அண்ணா
பல்கலைக்கழகத் தேர்வுகளை ஒத்திவைக்க உத்தரவிட வேண்டும்' எனத் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த அரசு வழக்குரைஞர் "4 மாவட்டங்களில் உள்ள இணைப்புக்
கல்லூரிகளுக்கான தேர்வுகள் டிசம்பர் 28-ஆம் பிறகு நடத்தப்படும். மற்ற
கல்லூரிகளுக்கு ஏற்கெனவே வெளியிடப்பட்ட அட்டவணைப்படி தேர்வுகள் தொடங்கும்'
என தெரிவித்தார். இதன் பிறகு, தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவது குறித்து
திங்கள்கிழமை (டிச. 14) அன்றே இணையதளத்தில் வெளியிட வேண்டும். இதுதொடர்பான
மனுவை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்ய வேண்டும் என
நீதிபதிகள் தெரிவித்தனர்.
148 கல்லூரிகளிலும் டிசம்பர் 28 முதல் தேர்வுகள்: இதையடுத்து, பல்கலைக்கழக
பதிவாளர் கணேசன் கூறியது: நீதிமன்ற உத்தரவின்படி, 4 மாவட்டங்களில் உள்ள 148
கல்லூரிகளிலும் அனைத்து பருவத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன.
டிசம்பர் 28-ஆம் தேதிக்குப் பிறகு இந்தத் தேர்வுகள் தொடங்கப்படும்.
திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும்.
பிற மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு ஏற்கெனவே அறிவித்தபடி
டிசம்பர் 15 முதல் தேர்வுகள் தொடங்கும் என்றார்.