'அரசு பணியுடன் மக்கள் பணியையும் மேற்கொள்கிறது வருமானவரி துறை'

சென்னை:''அரசு பணி மட்டுமல்லாது, மக்கள் பணியையும், வருமானவரி துறை மேற்கொள்கிறது,'' என, வருமானவரி துறை ஆணையர் ஸ்ரீவத்சவா தெரிவித்தார்.

தி.நகரில், வருமானவரி துறையின் வரி மீட்பு துறை அதிகாரி, பாஸ்கர் கிருஷ்ணமூர்த்தி எழுதிய, விகடன் பதிப்பகத்தார் வெளியிடும், 'வழிநெடுக வைரங்கள்' என்ற, நுால் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவில், வருமானவரி துறை முதன்மை ஆணையர் ஸ்ரீவத்சவா, ராஜாஜி மைய தலைவரும், மூத்த தணிக்கையாளருமான நாராயணசாமி, வருமானவரி துறை இணை ஆணையர் ஜெயராகவன், பாடகி 'பத்மபூஷன்' பி.சுசிலா, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி அபுல் ஹசன், கோமல் அன்பரசன், பாலரமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விழாவில், ஸ்ரீவத்சவா நுாலை வெளியிட, அபுல் ஹசன் பெற்றுக்கொண்டார்.
இணை ஆணையர் ஜெயராகவன் பேசிய தாவது: அரிதான நமது தமிழ் இலக்கியங்களில் இருந்து பல வைரங்களை தேர்ந்தெடுத்து, விலைமதிக்க முடியாத வைரமாக இந்த நுாலை அளித்து உள்ளார்
நுாலாசிரியர். பள்ளி பாடங்களில் மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையை கற்று தராது. வாழ்க்கைக்கான பாடத்தை தமிழ் இலக்கியங்கள் கற்று தருகிறது. அடுத்த தலை
முறைக்கான புத்தகம் இந்த நுால்.இவ்வாறு அவர் பேசினார்.நுாலாசிரியர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:நான் எழுதி, பிரபல நாளிதழ் ஒன்றில் தொடராக வந்ததை தொகுத்து, இந்த நுாலை எழுதியுள்ளேன். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களும் தமிழ் இலக்கியங்களில் உள்ளன.
தமிழ் இலக்கியங்களை யாராலும் இந்த மண்ணில் இருந்து மறைத்து விட முடியாது. அவ்வையாரின் நுால்கள் மற்றும் சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள பல அரிய விஷயங்களை இந்நுாலில் தொகுத்து உள்ளேன்.
இவ்வாறு அவர் பேசினார். ஸ்ரீவத்சவா பேசுகையில், ''வருமான வரித்துறை, அரசுப்பணியுடன், மக்களுக்கு பயன் அளிக்கக்கூடிய பணிகளையும் செய்து வருகிறது. அந்த பணியில் பாஸ்கர் கிருஷ்ண மூர்த்தி, சிறப்பாக செயல்படுகிறார். அவருக்கு எதிர்காலம் உள்ளது,'' என்றார்.