டில்லியில் கலாம் அறிவு சார் மையம் உடமைகள் வழங்க உறவினர்கள் சம்மதம்

ராமேஸ்வரம்:முதல்வர் கெஜ்ரிவால், டில்லியில் அப்துல்கலாம் அறிவு சார் மையம் அமைக்க உள்ளதால், உடமைகளை அனுப்ப கலாம் உறவினர்கள் ஒப்புதல் அளித்தனர்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் உடல் அடக்கம் செய்த ராமேஸ்வரத்தில், அவரது வாழ்க்கை வரலாறு படங்கள், விருதுகள், அவர் பயன்படுத்திய உடமைகள், மாணவர்கள், இளைஞர்களுக்கு நல்லொழுக்க தகவல்கள் அடங்கிய மியூசியம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது. மேலும் டில்லியில் கலாம் பெயரில் அறிவு சார் மையம் அமைக்க, 'அப்துல்கலாம் இந்தியா லட்சிய இயக்க' நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், டில்லியில் கலாம் பெயரில் அறிவியல் சார் மையம் அமைக்க மத்திய அரசு முன்வரவில்லை. மேலும் கலாம் வீட்டில் இருந்த 200க்கு மேலான புத்தகங்கள், வீணை, லேப்-டாப் உள்ளிட்ட அவரது உடமைகளை அக்., 24ல் ராமேஸ்வரத்தில் உள்ள கலாம் வீட்டுக்கு அனுப்பி வைத்தது.

இந்நிலையில் முதல்வர் கெஜ்ரிவால் அரசு, டில்லியில் கலாம் பெயரில் அறிவு சார் மையம் அமைக்க முன்வந்துள்ளது. இதுகுறித்து, அம்மாநில கலாசாரதுறை அமைச்சர் கபில் மிஸ்ரா, ராமேஸ்வரத்தில் கலாம் பேரன் சலீமிடம் போனில் பேசி, கலாம் வைத்திருந்த புத்தகம், உடமைகளை டில்லிக்கு அனுப்புமாறு கேட்டுள்ளார். அதற்கு கலாம் உறவினர்கள் சம்மதித்தனர்.
இதுகுறித்து கலாம் பேரன் சலீம் கூறியதாவது:

டில்லி மாநில அரசு, அப்துல்கலாம் பெயரில் அமைக்கவுள்ள அறிவு சார் மையத்திற்கு, தாத்தா(கலாம்) பயன்படுத்திய சில புத்தகங்கள் மற்றும் உடமைகளை டில்லிக்கு அனுப்பி வைக்க சம்மதம் தெரிவித்தோம். கலாம் பெயரில் மாணவர்கள், இளைஞர்களுக்கு நல்வழி காட்ட யார் முன்வந்தாலும், உதவிட நாங்கள் தயார். அவரது உடமைகளை டில்லி மாநில அரசு எப்போது கேட்டாலும், அனுப்பி வைப்போம். ராமேஸ்வரத்தில் கலாம் சமாதி அருகே பிரமாண்டமான அறிவியல் சார் மையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றார்.