சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் பதவி விலக விரும்பிய கலாம்

புவனேஸ்வர்:''முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நெருக்கடியான ஒரு கட்டத்தில் பதவி விலகுவது குறித்து யோசித்தார்,'' என, இந்திய செய்தித்தாள் பதிவாளர் அலுவலக டைரக்டர் ஜெனரல் எஸ்.எம்.கான் தெரிவித்துள்ளார்.


அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்தபோது, அவரது அலுவலக செய்திப் பிரிவு செயலராக இருந்தவர், கான். இவர், அப்துல் கலாமுடன் பணியாற்றியது குறித்து, ஒடிஸா தலைநகர் புவனேஸ்வரில், எஸ்.ஏ., பல்கலை மாணவர்களிடையே உரையாற்றினார்;

அதன் விவரம்:கடந்த, 2005ல், அப்போதைய பீஹார் கவர்னர் பூட்டாசிங் அளித்த அறிக்கையை ஏற்று, அம்மாநில சட்டசபையை கலைக்க, பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான அரசு முடிவு செய்தது. இதற்கு, ஜனாதிபதி அப்துல் கலாமின் ஒப்புதல் கோரப்பட்டது.அப்போது, அப்துல் கலாம், ரஷ்யா தலைநகர், மாஸ்கோவில் இருந்தார். அவர், பீஹார் சட்டசபையை கலைக்கும் உத்தரவில் கையெழுத்திட, முதலில் தயங்கினார். ஆனால், 'மீண்டும் பரிந்துரைத்தால், கண்டிப்பாக கையெழுத்திட வேண்டும்' என்ற சட்டம் உள்ளதால், வேறு வழியின்றி மாஸ்கோவில் இருந்தபடி கையெழுத்திட்டார்.

அதன் பின், 'பீஹார் சட்டசபை கலைப்பு செல்லாது' என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. அப்போது, அப்துல் கலாம், 'நான் தவறிழைத்து விட்டேன்' என்று கூறி, பதவி விலக விரும்பினார்.
இது தொடர்பாக, ராமேஸ்வரத்தில் உள்ள, தன் சகோதரரிடமும் விவாதித்தார். அதன் பின், பதவி விலகினால் எழும் அரசியல் சட்டப் பிரச்னைகளை தவிர்க்க வேண்டி, பதவியில் தொடர
தீர்மானித்தார்.

அவர் மிக எளிமையான மனிதர். அவருக்கென, சொந்தமாக வீடு, வாகனம், 'டிவி' என, எதுவுமே இல்லை; அவர் விருப்பம் எல்லாம் புத்தகம் தான். புத்தகங்களை பணம் கொடுத்து தான் வாங்குவார்; அன்பளிப்பை ஏற்கமாட்டார்; 'அப்படிப்பட்ட புத்தகங்களை வாசிக்காமல் தவற விடும் வாய்ப்பு உள்ளது' என்பார்.'இந்தியாவை முன்னேற்ற வேண்டும்' என்பதே அவரது கனவாக இருந்தது. இதற்காக, 'இந்தியா - 2020' என்ற திட்டத்தை தயாரித்து, அன்றைய பிரதமர் வாஜ்பாய் மற்றும் மத்திய அமைச்சர்களை, ஜனாதிபதி மாளிகைக்கு வரவழைத்து, கணினி மூலம் அகன்ற திரையில் விளக்கிக் காட்டினார்.

அப்துல் கலாம், இரண்டாவது முறையாக ஜனாதிபதி ஆவதை, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு விரும்பவில்லை. பிரதீபா பாட்டீலை, ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியது; அவருக்கு எதிராக, பா.ஜ., பைரோன்சிங் செகாவத்தை நிறுத்தியது. அப்துல் கலாம் மீண்டும் ஜனாதி பதியாக சம்மதித்தால், தன் வேட்பாளரை வாபஸ் பெறுவதாகவும், பா.ஜ., கூறியது.ஆனால், ஒருமித்த கருத்து இல்லாத சூழலில், கலாம் போட்டியிட மறுத்து விட்டார்.

மதம் மற்றும் ஆன்மிகத்தில், கலாமுக்கு அதிக ஈடுபாடு உண்டு. 'அனைத்து மதங்களும் அழகான தீவுகள்; ஆனால், ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் உள்ளன' என்பார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.