

வங்கக் கடல் பகுதியில் இருந்து, அரபிக் கடலை நோக்கி, காற்று அழுத்த தாழ்வு நிலை திரும்ப வாய்ப்பு உள்ளதால், தமிழகத்தின் வட மாவட்டங்களில், இன்றும் மழை உண்டு.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:வங்கக்
கடலில், சென்னை - புதுச்சேரி இடையே மையம் கொண்டு இருந்த காற்று அழுத்த
தாழ்வு நிலை, குறைந்த காற்று
அழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. 'இது, புயலாக மாற வாய்ப்பு உள்ளது;
இன்று காலை, 6:30 மணியளவில் கரையை கடக்கும்' என, கணிக்கப்பட்டது.ஆனால்,
குறைந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம், புயலாக
மாறாமல், கணிக்கப்பட்டதை விட முன்னதாகவே, நேற்று இரவு புதுச்சேரிக்கும்,
கடலுாருக்கும் இடையே கரையை கடந்தது. இது, தற்போது, அரபிக் கடலை நோக்கி
திரும்பும் வாய்ப்பு உள்ளது. எனவே, தமிழகத்தின் வட மாவட்டங்களில், இன்றும்
மழை நீடிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
வேகம் தணிந்தது:
புயல்
உருவாகவில்லை என்பதால், தமிழகம் தப்பியதுஎன்றே கருதப்படுகிறது. எனினும்,
காற்று அழுத்த தாழ்வு காரணமாக, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும்,
புதுச்சேரியிலும், நேற்றும் கனமழை தொடர்ந்தது. மாலைக்கு பின், மழையின்
வேகம் சற்று தணிந்தது.காற்று அழுத்த தாழ்வு மண்டலம், கரையை கடந்த போது,
மணிக்கு, 70 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது; பல இடங்களில் மரங்கள்
சாய்ந்தன. மின் கம்பங்கள் சாய்ந்து, விபத்து ஏற்படாமல் இருக்க, கடலுார்
மற்றும் வட மாவட்டங்களின் சில பகுதிகளில், நேற்று முன்தினம்
மதியம் முதலே, மின் வினியோகத்தை, தமிழ்நாடு மின் வாரியம் நிறுத்தி
இருந்தது. கடற்கரை பகுதி மக்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாற்று
இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
குறைந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலத்தால், எட்டு மாவட்டங்களில், 10
செ.மீ.,க்கு மேல் மழை பெய்துள்ளது.காஞ்சிபுரம், நாகப்பட்டினம்
மாவட்டங்களில் அதிகபட்சமாக, 20 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
7 பேர் பலி:
தமிழகத்தில் கனமழைக்கு, ஏழு பேர் பலியாகி உள்ளனர். சென்னையில், மூன்று
பேர்; விழுப்புரம் மற்றும் அரியலுார் மாவட்டங்களில், தலா ஒருவர்;
காஞ்சிபுரம் மாவட்டத்தில், இருவர் உயிரிழந்து உள்ளனர். மாநிலம் முழுவதும்,
நேற்று பிற்பகல், 2:00 மணி நிலவரப்படி, 300 வீடுகள் சேதமடைந்தன; 8,500
மரங்கள் சாய்ந்தன.
40 விமானங்கள் தாமதம்:
வங்கக்
கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால், சென்னை விமான நிலையம் மற்றும்
அதை சுற்றியுள்ள பகுதிகளில், நேற்று முன்தினம் முதல், கனமழை பெய்து
வருகிறது. இதனால், சென்னைக்கு வந்து செல்லும் விமானங்கள், நான்கு மணி நேரம்
வரை தாமதமாக வந்து சென்றன; 40 விமானங்களின் சேவையில், நேற்று பாதிப்பு
ஏற்பட்டது; பயணிகள் அவதிக்குள்ளாகினர். சென்னை துறைமுகத்தில், மூன்றாம் எண்
புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.