டெங்கு பீதியால் தவிக்கும் கோவை மக்கள்

தொடர் மழை, கொசுத்தொல்லை அதிகரிப்பு போன்ற காரணங்களால், பொதுமக்கள் மத்தியில் டெங்கு பீதி பரவியுள்ளது. சாதாரண காய்ச்சலையும் 'டெங்கு' என்று கூறி, பணம் பறிப்பதும் அதிகரித்துள்ளது.



கோவை நகரில், கடந்த சில நாட்களாக, தொடர் மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே தேங்கும் தண்ணீரால், கொசு உற்பத்தியும் அதிகமாகியுள்ளது. சீதோஷ்ண நிலை, கலங்கலாக வரும் குடிநீர், கொசுக்கள் போன்ற காரணங்களால், மக்களுக்கு பலவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, சளி மற்றும் காய்ச்சலால் அவதிப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து, மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

கடந்த சில ஆண்டுகளாக, மழைக்காலத்தையொட்டி டெங்கு காய்ச்சல் பரவி, பலரும் பாதிக்கப்பட்டு வருவதால், லேசாக உடல் சூடானாலே, டெங்குவாக இருக்குமோ என்று மக்கள் அஞ்சுகின்றனர். பகலில் கடித்து, டெங்கு வைரஸ்களைப் பரப்பும், 'ஏடிஸ்' கொசுக்கள் அதிகரித்துள்ளதும், இதற்கு முக்கியக்காரணம்.

மாநகராட்சிப் பகுதிகளில், பல மாதங்களாக கொசு மருந்து அடிக்கப்படவேயில்லை. இதன் காரணமாக, மக்களிடம் டெங்கு குறித்த அச்சமும், பீதியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மாநகராட்சி அலுவலர் ஒருவர் கூறுகையில், 'சில தனியார் மருத்துவமனைகளில், அரசுக்குத் தெரியப்படுத்தாமல் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதாகத் தொடர்ந்து புகார்கள் வருகின்றன. விரைவில், மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்களுடன் இணைந்து, ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளோம்' என்றார்.

அரசு டாக்டர் ஒருவர் கூறுகையில், 'முதல் மூன்று நாட்களில், மருந்து எடுத்துக் கொண்ட பின்பும், காய்ச்சல் தொடர்ந்தால், ஐ.ஜி.ஜி., மற்றும் ஐ.ஜி.எம்., பரிசோதனைகளுக்குப் பின், 'எலீசா' பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். ஆனால், மருத்துவமனைகளில் முறையான பரிசோதனைகளை எடுக்காமலே, டெங்கு என்று கூறி, பல ஆயிரம் ரூபாய் பணம் பறிப்பதாகத் தெரிகிறது. மக்கள் தான் விழிப்பாக இருக்க வேண்டும்.

'டெங்கு காய்ச்சலாக இருந்தால், தோல்களில் புள்ளிகள் உருவாகும். கண்களில் வலி, வாந்தி, தலைவலி ஏற்படும். இதுபோன்ற அறிகுறி இருந்தால், உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுப்பது நல்லது' என்றார்.

இந்த விஷயத்தில், மனித நேயத்தை மறந்து, ஒரு சில தனியார் மருத்துவமனைகள், மக்களிடம் பணம் பறிப்பது கொடுமை என்றால், கொசு மருந்து அடிக்காமல், முறையான விழிப்புணர்வு பிரசாரத்தையும் மேற்கொள்ளாமல், மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் மெத்தனமாக இருப்பது, அதை விட கொடுமை.