ஏடிஸ்' கொசுக்கள் உற்பத்தியை தடுக்கபாலிதீன் குப்பைகளை அழிக்க அறிவுறுத்தல்: டெங்கு காய்ச்சல் எதிரொலியால் நடவடிக்கை

விருதுநகர்: டெங்கு காய்ச்சல் ஏற்படுத்தும் 'ஏடிஸ்' கொசுக்கள் உற்பத்தியை தடுக்க, பாலிதீன் குப்பை தேங்காமல் அழிக்க உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக டெங்கு காய்ச்சலால் பலர் இறந்து வருகின்றனர். டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசு புழுக்களை அழிக்க ஏராளமான பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கொசுக்களை அழிக்க புகை மருந்து, அபேட் மருந்து போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவமனைகளில் சிறப்பு டாக்டர்களை பணியமர்த்தி சிகிச்சையளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.ஆயினும் ஆங்காங்கே சிறுவர்கள் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி வருகின்றனர். வீடுகள் தோறும் கொசு புழுக்களை அழித்தாலும் இக்காய்ச்சல் ஏற்படுவதற்கு திறந்த வெளிகளில் கொட்டப்படும் பாலிதீன் குப்பை, பிளாஸ்டிக் கப்களில் தேங்கி நிற்கும் மழை நீரில் 'ஏடிஸ்' கொசுக்கள் உற்பத்தியாகி மக்களை நோய்களுக்கு உள்ளாக்குவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அனைத்து உள்ளாட்சி நிர்வாகங்களிலும் திறந்த வெளிகளில் கொட்டப்பட்டுள்ளபிளாஸ்டிக் , பாலிதீன் குப்பையை உடனுக்குடன் அழிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,“ வீடுகள் தோறும் கொசு புழு ஒழிப்பு பணி, கொசு புகை அடிக்கப்பட்டும் வருகிறது.
தற்போது மழை பெய்து வருவதால் மழை நீர் திறந்த வெளிகளில் கொட்டப்படும் பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் கப்களில் தேங்கி அதிலிருந்து 'ஏடிஸ்' கொசுக்கள் உற்பத்தியாகி மக்களை கடித்து டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
இதனால் பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் கப்களை பயன்பாட்டை குறைக்கவும், திறந்த வெளிகளில் கிடக்கும் பிளாஸ்டிக் குப்பையை அழிக்கவும் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,” என்றார்.